தமிழகம்

குடிமராமத்து திட்டத்தின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 46 ஏரிகள் புனரமைக்கும் பணி தொடக்கம்: திருத்தணி அருகே ஆட்சியர் தொடங்கி வைத்தார்

செய்திப்பிரிவு

குடிமராமத்து திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 46 ஏரிகள் புனரமைக்கப்படவுள்ளன. இதற்கான பணியை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, திருத்தணி அருகே அகூர் பெரிய ஏரியில் நேற்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில், குடிமராமத்து திட்டத்தின் கீழ் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகள் புனரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுப்பணித் துறையின் கீழ் உள்ள ஏரிகளில், 46 ஏரிகளை புனரமைக்கும் பணியை ஆட்சியர் நேற்று தொடங்கி வைத்தார்.

திருத்தணி அருகே உள்ள அகூர் பெரிய ஏரியில் நடந்த இந்த தொடக்க விழாவில், பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி எம்எல்ஏக் களான பலராமன், நரசிம்மன், ஏழுமலை மற்றும் கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற் பொறியாளர் அசோகன், திருத்தணி கோட்டாட்சியர் விமல்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் ஆட்சியர் பேசியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ், ரூ.4.33 கோடி செலவில், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஏரிகள், திருத்தணி ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஏரிகள், திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஏரிகள், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு ஏரி, ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 9 ஏரிகள், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் 7 ஏரிகள், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 ஏரிகள், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஏரிகள் என மொத்தம் 46 ஏரிகள் புனரமைக்கப்படவுள்ளன.

அரசாங்கம் மற்றும் பொது மக்களுடன் இணைந்து மேற் கொள்ளப்பட உள்ள இந்த ஏரிகள் புனரமைக்கும் பணியில், விவசாயிகள் 10 சதவீத பங்களிப்பை உடல் உழைப்பு மூலமோ, பொருள்களாகவோ, நிதியாகவோ வழங்கலாம்.

இந்த ஏரிகள் புனரமைக்கும் பணியில், ஏரிக்கரையில் உள்ள முட்புதர்களை முழுவதுமாக அகற்றி கரையை பலப்படுத்துதல், ஏரியில் உள்ள சேதமடைந்த மதகுகளை சீரமைத்தல், ஏரி வரத்துக் கால்வாய் மற்றும் உபரிநீர் கால்வாய் தூர் வாருதல், மதகு பாசன வாய்க்கால்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT