தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் அனைத்து வணிக சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் விக்கிரமராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், டீக்கடை உரிமையாளர்கள் சங்கம், ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட 62 அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டம் முடிந்தவுடன் விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறியது:
விவசாயிகளின் கோரிக்கைக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் அறிவித் துள்ள கடையடைப்பில் பங்கேற்கிறோம். இதனையடுத்து ஏப்ரல் 25-ம் தேதி காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும். மொத்தம் 21 லட்சம் வணிகர்கள் கடையடைப்பில் பங்கேற்பார்கள். அன்றைய தினம் பல நூறு கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிக்கும். விவசாயிகளின் கோரிக்கைகளை முதல்வரும், பிரதமரும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலேயே இதில் கலந்துகொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.