தமிழக அரசின் அநீதிகளுக்கு எதிராக மக்களிடம் நியாயம் கேட்டு விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய் யப்பட்டதை கண்டித்து, ‘சட்டப் பேரவையில் ஜனநாயகம் படும் பாடு’ என்ற தலைப்பில் சென்னை தங்கசாலை மணிக்கூண்டு அருகே நேற்று பொதுக்கூட்டம் நடந்தது. அதில் கருணாநிதி பேசியதாவது:
சட்டப்பேரவையில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருந்தால் நாங்கள் இதுபோன்ற கூட்டத்தை நடத்த வேண்டிய அவசியமே இருந்திருக்காது. மாநகராட்சி தேர்தலில் ஆதரவு கேட்பதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. என்னைப் பொறுத்தவரை தேர்தல் வெற்றி, தோல்விகளைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. நடந்து முடிந்த தேர்தலில் பலர் மேற்கொண்ட சூழ்ச்சிகளால் திமுக தோற்கடிக்கப்பட்டது.
கடைசி நேரத்தில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து வந்த செய்தியால், சூழ்ச்சி செய்யப் பட்டு தேர்தலில் திமுக தோற்கடிக் கப்பட்டது. இதனால்தான் ஆட் சிக்கு வரவேண்டிய திமுக, எதிர்க்கட்சியாக வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கு காரணமான வர்கள் யார் என்பதை அறிவேன். அவர்களுக்கு சரியான நேரத் தில் தகுந்த தண்டனையை பெற்றுத் தருவேன். திமுகவை பொறுத்தவரை எந்தவித சலசலப் புக்கும் அஞ்ச மாட்டோம். காவல் துறை மற்றும் ஆளுங்கட்சி அராஜ கங்களுக்கு பயந்து ஒதுங்கிவிட மாட்டோம். துணிச்சலுடன் எங்க ளது கடமையை செய்வோம்.
சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது, ஆளுங்கட்சி என் னென்ன அநீதிகளில் ஈடுபடுகிறது என்றெல்லாம் மக்களிடம் அழுத்தம் திருத்தமாக விளக்குவதற்கு இந்த ஒரு பொதுக்கூட்டம் போதாது. எனவே, தமிழகம் முழுவதும் விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும். அது உண்ணாவிரதமா, பொதுக் கூட்டமா அல்லது என்ன வடிவில் இருக்கும் என்பதை கட்சியின் செயற்குழு, பொதுக்குழு, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுடன் கலந்து பேசி விரைவில் அறிவிப்போம். இந்த போராட்டங்கள் மூலம் மக்களிடம் நியாயம் கேட்க இருக்கிறோம். மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘காவல் துறை மானியக் கோரிக் கையின்போது, நாங்கள் பல கேள் விகளை கேட்போம், தவறுகளை சுட்டிக்காட்டுவோம் என தெரிந்து கொண்டு, அதற்கு பதில் சொல்ல முடியாது என்பதால் திட்டமிட்டே எங்களை வெளியேற்றியுள்ளனர். எனவே வேறு வழியின்றி, சட்டப்பேரவையில் பேச வேண் டியதை மக்கள் மன்றத்தில் பேச வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறை மானியக் கோரிக்கை பதில் உரையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, தர்மத்துடன் சவால் விட்டுள்ளார். திமுக ஆட்சியில் பேரவைத் தலைவர் நேரம் தந்ததால்தான், ஜெயலலிதாவால் ஒன்றரை மணி நேரம் பேச முடிந்தது. இப்போதும் நேரம் ஒதுக்கித் தந்தால் நாங்கள் பேசு வதற்கு தயாராக இருக்கிறோம்’’ என்றார்.
எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், சட்டப்பேரவை காங் கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ முகமது அபுபக்கர், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, திமுக மாநிலங்களவை குழு தலைவர் கனிமொழி உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பொதுக்கூட்ட மேடை முகப்பில், ‘அநீதிக்கு ஆராதனையா? நீதிக்கு தண்டனையா?’ என்ற வாசகம் பெரிதாக வைக்கப்பட்டிருந்தது.