தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டி யன், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர் களிடம் நேற்று கூறியது:
தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இது வரவேற்கத்தக்கது. அதே சமயம், பெரு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யாதது மிகுந்த வேதனை யளிக்கிறது. பெரிய, சிறிய விவசாயிகள் என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்து விவசாயி களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர், ‘பெரிய விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய இயலாது’ என்று தெரிவித்துள்ளார். பெரு விவசாயிகளின் கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்யும் அறிவிப்பை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும். மேலும், நடப்பாண்டில் புதிதாக கடனுதவி வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படும் ஆகஸ்ட் 1-ம் தேதி, அந்தத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.