சென்னை மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளின் நிலை அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை ஆகிய 3 நாடாளு மன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச் சாவடிகளின் நிலை அலுவலர் களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம்கள் வெள்ளிக்கிழமை நடந்தன.
தென்சென்னை தொகுதிக்கு மாநகராட்சி அடையார் மண்டல அலுவலகத்திலும், மத்திய சென்னை தொகுதிக்கு ஷெனாய்நகர் மாநகராட்சி கலையரங்கிலும், வடசென்னை தொகுதிக்கு ராயபுரம் பி.ஏ.கே. பழனிச்சாமி மேல்நிலைப் பள்ளியிலும் இந்த முகாம்கள் நடந்தன.
3 நாடாளுமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் ஆனந்தகுமார், துணை ஆணையர்கள் அருண்சுந்தர் தயாளன், என். லட்சுமி ஆகியோர் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சியளித்தனர்.
இந்த பயிற்சி முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்கள், மற்றும் விண்ணப்பித்து வருபவர்களின் முகவரி உள்ளிட்ட விபரங்களை ஆய்வு செய்து, அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.தேர்தலுக்கு முதல் நாள், வாக்குச் சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுகளை அளிப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.