சேலம், வேலூர் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையம் பிப்ரவரி 28 – ம் தேதி தொடங்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''பொதுமக்களுக்கு விரைவாகவும் எளிதாகவும் பாஸ்போர்ட் கிடைக்க ஏதுவாக மாநிலங்களில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவு செய்தது.
இந்த திட்டத்தை வெளியுறவுத் துறை அமைச்சகமும் அஞ்சலகத் துறையும் இணைந்து செயல்படுத்தி வருகிறது.
இதன்படி முதலில் சோதனை அடிப்படையில் கர்நாடகாவில் உள்ள மைசூர் தலைமை அஞ்சலகத்தில் பாஸ்போர்ட் சேவை மையம் தொடங்கப்பட்டது. நாடாளுமன்ற விவகாரத்துணை அமைச்சர் அனந்த குமார், வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஜெனரல்(ஓய்வு) வி.கே. சிங், பழங்குடியினர் விவகாரத்துறை இணை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சுமன் பாய் பபோர் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இத்திட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மேலும் 56 தலைமை அஞ்சல் அலுவலகங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் சேலம் மற்றும் வேலூர் தலைமை அஞ்சலகங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
இந்த 2 சேவை மையங்கள் இம்மாதம் 28 – ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தலைமை அஞ்சலகத்தில் செயல்படும் பாஸ்போர்ட் சேவை மையம் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தின் வரம்புக்குள் இருக்கும் என்றும் சேலம் பாஸ்போர்ட் சேவை மையம் கோயம்புத்தூர் மண்டல பாஸ்போர்ட் அலவலகத்தின் வரம்புக்குள் வரும்'' என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.