குற்றாலத்தில் கடந்த 2 நாட்களாக குளிர்ந்த காற்று வீசுவதால் இவ்வாண்டுக்கான சீஸன் அறிகுறி காணப்படுகிறது. இன்னும் ஒருவாரம் அல்லது 10 நாட்களில் அருவிகளில் தண்ணீர் கொட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றாலத்தில் முதல் சீஸனான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களிலும், 2-வது சீஸனான டிசம்பர், ஜனவரி மாதங்களிலும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
வழக்கமாக சித்திரை மாதம் 15-ம் தேதிக்குப்பின் குற்றாலத்தில் குளிர்ந்த காற்று வீச்சு இருந்தால் வைகாசி மாத தொடக்கத்தில் மழை பெய்யும். அவ்வாறு குற்றாலம் மலைப்பகுதியில் மழை பெய்தால் அருவிகளில் தண்ணீர் வரத்து இருக்கும். ஜூன் தொடக்கத்திலேயே சீஸன் ஆரம்பிக்கும்.
ஆனால், இவ்வாண்டு அவ்வாறு குளிர்ந்த காற்று சித்திரை மாதத்தில் வீசவில்லை. கடந்த 2 நாட்களாகத்தான் சுட்டெரிக்கும் வெயில் தணிந்து குளிர்ந்த காற்று வீச்சு உள்ளது. இந்த காற்று காரணமாக வானில் கருமேகங்கள் திரண்டுள்ளன. நேற்று மாலையில் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. இதனால், இன்னும் 1 வாரம் அல்லது 10 நாட்களில் சீஸன் தொடங்கும் என்று எதிர்பார்ப்பதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கிறார்கள்.
நேற்று காலையில் குற்றாலத் தில் ஐந்தருவியில் ஒரு கிளையில் மட்டுமே லேசாக தண்ணீர் விழுந்தது. குற்றாலத்துக்கு வந்தி ருந்த சிலர் அதில் குளித்துவிட்டுச் சென்றனர். பிரதான அருவி உள்ளிட்ட மற்ற அருவிகளில் தண்ணீர் விழவில்லை.
கோயிலில் சிறப்பு பூஜை
இதனிடையே குற்றாலத்தில் மழை பெய்ய வேண்டி காசிமேஜர்புரம் பகுதி மக்கள், விவசாயிகள், குற்றாலம் பகுதி வியாபாரிகள் என நூற்றுக் கணக்கானோர் குற்றாலத்தில் மலைக்குமேல் 8 கி.மீ. தொலைவில் உள்ள காவுச்சாமி கோயிலுக்குச் சென்று இன்று பொங்கலிட்டு சிறப்பு பூஜை செய்கிறார்கள்.
அதிகாரிகள் அலட்சியம்
சிறப்புமிக்க இந்த சுற்றுலா தலத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள், வழிமுறை கள் ஆகியவை குறித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட நிர்வாகமும், குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும் ஒருசில நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால் நிரந்தர நடவடிக்கைகளை எடுக்க வில்லை. இதனால் ஆண்டுதோறும் குற்றாலத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள் அவதியுறுவது நீடிக்கிறது.
இவ்வாண்டும் சீஸன் தொடங் குவதற்கு முன்பு குற்றாலத்தில் மேம்பாட்டுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள வில்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடைகள், வாகனங்க ளுக்கு கட்டணம், கழிப்பறைகள் போன்றவற்றுக்கு இன்னும் ஏலம் நடைபெறவில்லை. அதேநேரத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 156 கடை களுக்கு இன்று ஏலம்விட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள் ளதாகத் தெரிகிறது.
பாறைகள் அகற்றப்படுமா?
குற்றாலத்தில் சீஸனையொட்டி புனரமைப்பு பணிகள் எதையும் செய்யாதது குறித்து இப்பகுதியை சேர்ந்த திருமுருகன் கூறியதாவது:
சாலைகள், கழிப்பிடங்கள், அருவிக்கரை சீரமைப்புப் பணிகள், சுத்தப்படுத்தும் பணிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பிரதான அருவிக்குமேல் உள்ள பொங்குமா கடல் பகுதியில் தலா 300 கிலோ எடையுள்ள 3 பாறைகள் உள்ளன. அருவியில் தண்ணீர் இல்லாத கடந்த 4 மாதங்களில் இவற்றை உடைத்து அகற்றியிருக்கலாம். அதை யாரும் செய்யவில்லை.
வெள்ளம் வரும்போது இந்த பாறைகள் உருண்டு அருவியில் விழும் அபாயம் இருப்பது குறித்து வனத்துறை, பேரூராட்சி நிர்வாகம், காவல்துறை என்று அனைத்து துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடமும் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.
கடந்த ஐயப்ப சீஸனின்போது சிறிய கல் விழுந்து அருவியில் குளித்த மதுரையை சேர்ந்த சுற்றுலா பயணி பலத்த காயமடைந்து உயிரிழந்தார். எனவே பொங்குமா கடலில் உள்ள சிறிய பாறைகளை உடைத்து அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.