தமிழகம்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நாய்கள் தொல்லையால் பரிதவிக்கும் பொதுமக்கள்

எஸ்.கோபு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அச்சுறுத்தலாக சுற்றித் திரியும் 10-க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடிக்க, பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லாததால் நகராட்சி நிர்வாகம் திணறுகிறது.

கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள பெரிய அரசு மருத்துவமனை, பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையாகும்.

வால்பாறை, ஆனைமலை, பொள்ளாச்சி, நெகமம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பொது மருத்துவம், கர்ப்பகால சிகிச்சை, விபத்து உள்ளிட்ட பல்வேறு விதமான பரிசோதனைகளுக்காக தினமும் 1,000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், நாளுக்குநாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. நோயாளிகளும், பார்வையாளர்களும் நாய் கடிக்குப் பயந்து ஓடும் சூழலில், நாய்களை அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் கூறும்போது, “மருத்துவமனை வளாகத்தில் பிரசவ வார்டுக்கு அருகில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. நாய்களை நாங்கள் அடிக்கடி விரட்டி விடுகிறோம். ஆனால், அவை சிறிது நேரத்தில் மீண்டும் மருத்துவமனை வளாகத்துக்குள் வந்து விடுகின்றன.

நோயாளிகளைக் காண வரும் பார்வையாளர்கள் சாப்பிடும் உணவில் மீதமுள்ளவற்றை அப்படியே போட்டுச் செல்வதுதான், நாய்கள் இந்த வளாகத்தை விட்டு வெளியேறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணம். நாளுக்கு நாள் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எங்களால் நாய்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நாய்களை விரட்ட முயன்றால், எங்களை கடிக்க வருகின்றன” என்றனர்.


நகராட்சியின் நாய் பிடிக்கும் வாகனம்.

நோயாளிகளின் உறவினர்கள் சிலர் கூறும்போது, “பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பார்வையாளர்கள் ஓய்வு அறை, பிணவறைக்குச் செல்லும் வழியில் உள்ளது. இறந்தவர்களின் உடலைப் பெற வரும் உறவினர்களின் கூட்டம் ஓய்வறையில் அதிகமாக இருப்பதால், அங்கு அமரவும், சாப்பிடவும் முடியாது. அதனால் வளாகத்தின் திறந்த வெளியில் அமர்ந்து சாப்பிட வேண்டியுள்ளது.

உணவு அருந்தும் நேரங்களில் எங்களை நோக்கி கூட்டமாக வரும் நாய்களைப் பார்த்து அச்சமடைந்து, சாப்பிடுவதை பாதியிலேயே கைவிட்டுவிட்டு, அங்கிருந்து ஓடி விடுகிறோம்’’ என்றனர்.

இது தொடர்பாக பொள்ளாச்சி நோயாளிகள் நலச் சங்கம் சார்பில் சார் ஆட்சியரிடம் முறையிடப் பட்டது. பின்னர், மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்ட சார் ஆட்சியர், நாய்களைப் பிடித்து அப்புறப்படுத்துமாறு நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் முருகேசன் கூறும்போது, “நாய் பிடிப்பதற்கான உபரகணங்கள், பிடிப்பட்ட நாய்களை கொண்டுசெல்வதற்கான வாகனம், நாய்களுக்கான கருத்தடை அறுவைசிகிச்சை மையம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் எங்களிடம் உள்ளன. ஆனால் நாய்களைப் பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் இல்லை. அவர்களை வேறு மாவட்டத்தில் இருந்துதான் வரவழைக்க வேண்டியுள்ளது. விரைவில் நாய்களைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT