தமிழகம்

மார்க்சிஸ்ட் முதுபெரும் தலைவர் ஆர்.உமாநாத் மறைவு: திருச்சியில் இன்று இறுதி நிகழ்ச்சி

செய்திப்பிரிவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், முன்னாள் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான 92 வயதாகும் ஆர்.உமாநாத், திருச்சியில் புதன்கிழமை காலமானார். இறுதி நிகழ்ச்சி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

விடுதலைப் போராட்ட வீரராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவராகவும் விளங்கிய உமாநாத், கேரள மாநிலம் காசர்கோட்டில் பிறந்தவர். தந்தை ராமநாத் ஷெனாய், தாய் நேத்ராவதி.

இவர் சிறு வயதிலேயேஅந்நிய துணி எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர். கல்லூரியில் பயின்ற போது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை நடைபெற்ற பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றவர். கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் தன்னை கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக இணைத் துக்கொண்டு, தலைமறைவாக இருந்து கட்சிப் பணிகளை மேற்கொண்டவர்.

ஆங்கிலேய ஆட்சியை வன்முறை மூலம் அகற்ற சதி செய்ததாக கைது செய்யப்பட்டு, 9 ஆண்டுகள் 6 மாதங்கள் சென்னையில் சிறை தண்டனையை அனுபவித்தவர். மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்திய உமாநாத், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்குப் பெற்றுத் தந்தவர்.

2 முறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகவும், 2 முறை நாகை சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயலாற்றியவர். 1952-ம் ஆண்டில் பாப்பாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் உ.வாசுகி, வழக்கறிஞர் நிர்மலா ராணி, நேத்ராவதி (தற்போது உயிருடன் இல்லை) ஆகிய 3 மகள்கள்.

இன்று இறுதி நிகழ்ச்சி

இவர் கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றி திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை உயிரிழந்தார். உமாநாத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கட்சியின் திருச்சி மாவட்டக்குழு அலுவலகமான கரூர் புறவழிச்சாலையில் உள்ள வெண்மணி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்கி, காவிரிக் கரையில் உள்ள ஓயாமரி இடுகாட்டில் மின் தகனம் செய்யப்படவுள்ளது.

இதையொட்டி நடைபெறவுள்ள இரங்கல் நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், பிருந்தா காரத், கொடியேறி பாலகிருஷ்ணன், மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநிலச் செயலர் தா.பாண்டியன் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினர் பங்கேற்கவுள்ளனர்.

SCROLL FOR NEXT