பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
மத்திய திட்டக் குழுவுக்கு பதிலாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் அமைப்பின் கூட்டம், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் இன்று காலை 10 மணி அளவில் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர்களான மாநில முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் முதல்வரின் செயலா ளர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.
தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடு, துறைவாரியாக கேட்டுப் பெற வேண்டிய நிதி மற்றும் ஜிஎஸ்டி வரி குறித்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுவார் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து பேசவும் முதல்வர் திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது. டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை சந்தித்து பேசுகிறார்.
முதல்வர் டெல்லி சென்று வந்த பிறகு அதிமுக அணிகளின் இணைப்பு முயற்சி வேகமெடுக்கும் என்றும், அடுத்த ஓரிரு நாட் களில் அமைச்சரவை மாற்றம் நிகழும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.