வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட 20 செயற்கைக்கோள்களில் 2 செயற்கை கோள்களை உருவாக்கிய கல்லூரி மாணவர்களுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 20 செயற்கைக்கோள்களை விண்ணில் வெற்றிகரமாக நிலைநாட்டி, புதிய சாதனை படைத்த விஞ்ஞானிகள் அனைவருக்கும், பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்
நம் நாட்டில் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 20 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளின் இப்புதிய சாதனை பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது. இஸ்ரோ விஞ்ஞானிகள் மிகக் குறுகிய காலத்தில் இந்த செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்ப முயற்சி மேற்கொண்டது நம் நாட்டு விஞ்ஞானிகளின் அபரீத திறமையை உலக அரங்கில் நிலைநாட்டியிருக்கிறது.
மேலும், மற்ற உலக நாடுகளின் விண்வெளித் திட்டத்திற்கு நமது விஞ்ஞான நிபுணத்துவம் பேருதவியாக இருப்பது இந்திய நாட்டு விஞ்ஞானிகளுக்கு உலக நாடுகளில் மிகப்பெரிய வரவேற்பும், பாராட்டும் உண்டு என்று தான் சொல்ல வேண்டும். இதற்கு காரணம் செயற்கைக் கோள்களை உருவாக்கிய விஞ்ஞானிகள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களது கடின உழைப்பாகும் என்றால் அது மிகையாகாது.
குறிப்பாக இந்த 20 செயற்கைக்கோள்களில் 2 செயற்கை கோள்களை சென்னை மற்றும் புனேவில் உள்ள கல்லூரி மாணவர்களால் உருவாக்கப்பட்டது என்பது நமது மாணவச் செல்வங்களின் இன்றியமையாத பணியை வெளிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. இது இந்திய மாணவர்கள் அறிவியல் துறையில் கொண்ட ஈடுபாட்டை உலக அளவில் வெளிப்படுத்துகிறது.
ஏற்கெனவே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றி நாட்டு இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அப்துல்கலாம் இன்றைய இளைஞர்கள் கனவு கண்டு நாட்டினை முன்னேற்ற வேண்டும் என கூறியதற்கு ஏற்ப இன்றைக்கு சென்னை மற்றும் புனேவில் உள்ள கல்லூரி மாணவர்களது செயற்கைக் கோள் படைப்பு அமைந்திருக்கிறது.
எனவே, இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களது கடின உழைப்பும், பணியும் தொடர, வளர, சிறக்க என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.