சென்னை புரசைவாக்கம் சிட்டிமால் வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
புரசைவாக்கம் பிரதான சாலையில் சன்டெக் சிட்டி ஷாப்பிங் மால் என்ற பெயரில் வணிக வளாகம் உள்ளது. கீழ்தளத்துடன் சேர்த்து 4 தளங்களை கொண்ட இதில் 35-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில் இதில் உள்ள துணிக் கடை ஒன்றில் மாலை சுமார் 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்டு கட்டிடத்துக்குள் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்தனர். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு அருகில் உள்ள கடைகளுக்கும் தீ வேகமாக பரவியது.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் தீ முற்றிலும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
தீ விபத்து குறித்து தலைமைச் செயலக காலனி போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் துணிக்கடையில் இருந்த ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
சென்னை சில்க்ஸ் ஜவுளி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.