தமிழகம்

நியாய விலைக் கடைகளில் பொருட்களைப் பெற ஆதார் அட்டை நகல் கட்டாயம் இல்லை: உணவுத்துறை அதிகாரிகள் தகவல்

செய்திப்பிரிவு

கடந்த 2012-13ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பதிவு செய்யப்படும் உடற்கூறு பதிவுகள் அடிப்படையில் குடும்ப அட்டைகளுக்கு பதில், ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை முதல்கட்ட மாக செயல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களையும் பெற்றது. ஆனால், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படவில்லை.

தற்போது அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களிலும் முதல்கட்டமாக ஸ்மார்ட் கார்டு திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் இன்று முதல் (ஜூன் 1-ம் தேதி) நியாய விலைக் கடைகளுக்கு ஆதார் அட்டை நகலை கொண்டுவர வேண்டும் என உணவுத்துறையினர் கூறியுள்ளதாக தகவல் வெளியானது. ஆதார் அட்டை நகலை அளிக்காவிட்டால் பொருட்கள் வழங்கப்படாது என்றும் தகவல் பரவியது.

இத்தகவலை உணவுத் துறையினர் மறுத்துள்ளனர். இது தொடர்பாக, உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆதார் அட்டை நகலை கேட்டு பெற வேண்டும் என எந்த நியாய விலைக் கடைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆதார் அட்டை நகலுக்கும் பொருட்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பொதுமக்கள் வழக்கம் போல் பொருட்களை பெற்றுச் செல்லலாம். அதே நேரம், உணவுப் பொருள் வழங்கல் அலுவலகத்துக்கு மண்டலம் மாற்றம், முகவரி மாற்றம், பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போது, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல்கள் பெறப்படுகின்றன.

ஆதார் அட்டை நகல் பெறுவது என்பது, பின்னாளில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்போது, இணைப்புக்கு எளிமையாக இருக்கும். ஏற்கெனவே பொதுமக்கள் சில பகுதிகளில் ஆதார் எண், கைபேசி எண் அளித்துள்ளனர். புதிய ஸ்மார்ட் கார்டு தயாரிப்பின்போது, இந்த விவரங்கள் தேவைப்படும் என்பதால் வாங்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.

நியாய விலைக் கடைகளில் பொருட்கள் விநியோகத்துக்கும், ஆதார் அட்டை நகல் பெறுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜூம் உறுதி செய்துள்ளார்.

SCROLL FOR NEXT