ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா தாராளமாக நடந்து வருகிறது. அரசு ஆம்புலன்ஸ்கள் மூலம் பணம் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
நாகர்கோவிலில் நேற்று அவர் கூறியதாவது: தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் அதிகம் உள்ளன. சிபிஎஸ்இ பள்ளிகள் குறைவு. இதை அடிப்படையாக வைத்து ‘நீட்’ தேர்வை கொண்டுவர மத்திய அரசு முயற்சி செய்கிறது. இதனால், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவர். ‘நீட்’ தேர்வு மற்றும் விவசாயிகள் பிரச்சினையில் தமிழக மக்களை மத்திய அரசு வஞ்சிக்கிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு கொண்டு வருகிறது. எனவே இதை முறைப் படி எதிர்ப்பதற்காக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டு இயக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா தாராளமாக நடந்து வருகிறது. தேர்தல் ஆணையம் ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. ஆம்புலன்ஸ் மூலம் பணத்தை கொண்டுசென்று பட்டுவாடா செய்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும். இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் பொறுப்பு முதல்வர், பொறுப்பு ஆளுநரின் ஆட்சி நடக்கிறது. இந்நிலை மாற வேண்டும் என்றார்.