தமிழகம்

நுரையீரல் புற்றுநோயில் முதலிடம் நோக்கி தமிழகம்: மருத்துவர் சாந்தா அதிர்ச்சி தகவல்

செய்திப்பிரிவு

உலக புகையிலை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்திய பத்திரிக்கை கழகம் (PII), புகையிலை கட்டுப்பாட்டுக்கான ஆதார மையம், புற்றுநோய் கழகம் (WIA) மற்றும் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அவசர தேவைக்கான நல நிதியம் (UNICEF) ஆகியவை சார்பில் புகையிலை கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நேற்று சென்னை தரமணியில் உள்ள இந்திய பத்திரிக்கை கழக வளாகத்தில் நடந்தது.

கருத்தரங்கில் இந்திய பத்திரிக்கை கழகத் தின் இயக்குநர் சசி நாயர் பேசும்போது, “பொது இடங்களில் புகைபிடிக்க தடை விதிக்கப்பட்டிருந் தாலும் அது பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவு புகைக்கு அடிமையாவது கவலை அளிக்கிறது. பத்திரிகைகளில் புகையிலைக்கு எதிராக தொடர் விழிப்புணர்வு கட்டுரைகள் எழுதுவதே இதற்கான தீர்வாக அமையும்” என்றார்.

புற்றுநோய் கழகத்தின் மருத்துவர் வி.சாந்தா கூறும்போது, “புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய், இதய நோய், மூச்சுக் கோளாறு, வாதம் ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் புகையிலை நோய் தாக்கம் 40 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால் வெளிநாடுகளில் இது 20 சதவீதமாக குறைந்துள்ளது. இது குறித்து போதிய விழிப்புணர்வு இங்கு இல்லை. அரசும் அக்கறை காட்டுவதில்லை.

நுரையீரல் புற்றுநோயால் இறப்பவர்களின் விகிதம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. நுரையீரல் புற்றுநோய் தாக்கத்தில் 9-வது இடத் தில் இருந்த தமிழகம் இன்று முதலிடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. புகைபிடிப்பதுதான் இதற்கு முக்கியக் காரணம். பள்ளி மாணவர்களிடம் நாம் புகையிலையின் தீங்குகளை உணர்த்த வேண்டும். சிகரெட் பாக்கெட்டுகளில் 85 சதவீதம் அளவுக்கு எச்சரிக்கைப் படம் அச்சிடப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்தியாவில் ஒருபுறம் புகையிலையை கட்டுப்படுத்த ஒரு துறையும், புகையிலையை ஊக்குவிக்க இன்னொரு துறையும் செயல்பட்டு வருவதால்தான் புகையிலையில் இருந்து இந்தியா இன்னும் மீள முடியவில்லை. இதில் மிகப்பெரிய அரசியல் உள்ளது” என்றார்.

புற்றுநோய் கழகத்தின் துணைத் தலைவர் ஹேமந்த் ராஜ் பேசுகையில், “80 முதல் 90% நுரையீரல் புற்றுநோய் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் வருகிறது. இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பலியாகின்றனர்” என்றார்.

யுனிசெஃப் அமைப்பின் சிறப்பு அலுவலர் சுகாதா ராய், ‘‘இந்தியாவில் புகைப்பவர்களின் எண்ணிக்கை 27. 5 கோடியாக உள்ளது. இதில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் இறக்கின்றனர். எனவே புகையிலையில் இருந்து குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பெண்களை காக்க யுனிசெஃப் தீவிரமாக முயன்று வருகிறது” என்றார்.

புற்றுநோய் கழகத்தின் பேராசிரியர் மருத்துவர் விதுபாலா பேசும்போது, ‘‘புகைப்பதால் வரும் 54% நோய்களுக்கான காரணத்தை முன்கூட்டியே அறிய முடிவதில்லை. ஒரு சிகரெட் துண்டில் 4000 வேதிப்பொருட்கள் உள்ளன. இதில் 43 மூலப்பொருட்கள் புற்றுநோயைத் தூண்டுபவை. புகையிலை தயாரிப்பில் இந்தியாவில் 10 சதவீதம் பெண்களும், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 5 சதவீதமும் ஈடுபடுத்தப்படுகின்றனர். 76% பெண்கள் பீடி தயாரிப்பு தொழிலில் உள்ளனர்” என்றார்.

தமிழக அரசின் பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் கே.குழந்தைசாமி பேசுகையில், ‘‘இந்திய அளவில் தமிழகம் புகையிலை தாக்கம் குறைந்த மாநிலமாக முன்னேறி வருகிறது. கடந்த 2008-ல் இருந்து தற்போது வரை பொது இடங்களில் புகைபிடித்த 1,31,582 பேரிடம் ரூ.1.60 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கல்வி நிறு வனங்களின் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்தால் 104 என்கிற எண்ணுக்கு புகார் செய்யலாம். பொது இடங்களில் புகைப்பவர் களை தடுக்க, இலவச ‘மொபைல்-ஆப்’ ஒன்றை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளோம். தற்போது 12 ஆயிரத்து 780 பள்ளிகள், 1,338 கல்லூரிகள் புகையிலை இல்லா கல்வி வளாகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன” என்றார்.

‘பிளைன் பேக்கேஜ்’ என்றால் என்ன?

புகையிலை ஒழிப்பு நாளை முன்னிட்டு இந்தாண்டு ‘பிளைன் பேக்கேஜ்’ திட்டத்தை முன்மாதிரி திட்டமாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. விளம்பரங்கள் இல்லாத அட்டைப் பெட்டிகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது இதன் நோக்கமாகும். இதன்படி நிறுவனத்தின் சின்னம், கவர்ச்சிகரமான வாசகங்கள், படங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். கடந்த 2012 டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியா முதல் முறையாக மேற்கண்ட திட்டத்தை சட்டமாக்கியது. இதன் மூலம் அங்கு 0.55 % புகையிலைப் பொருட்களின் மூலம் ஏற்படும் நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவை தொடர்ந்து கடந்த 2015-ல் அயர்லாந்து, வடக்கு அயர்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளும், 2016-ல் பிரான்ஸும் இதனை சட்டமாக்கியுள்ளன. இலங்கை, பங்களாதேசம் ஆகிய நாடுகளும் இந்த திட்டத்தை சட்டமாக்குவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன.

SCROLL FOR NEXT