தமிழகம்

மேயர் பதவிக்கு குறிவைக்கும் விஐபி-க்கள்: கோவை மாநகராட்சி அதிமுகவில் பரபரப்பு

செய்திப்பிரிவு

சட்டப்பேரவை தேர்தல் முடிந்த கையோடு அரசியல் புள்ளிகள் குறிவைப்பது உள்ளாட்சி மன்றத் தேர்தலைத்தான். தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியைப் பிடித்த பின்பு அதிமுகவில் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களில் முக்கியப் பதவிகளுக்கு இப்போதிருந்தே காய் நகர்த்துதல்கள் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கின்றனர் கட்சியின் சீனியர்கள்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 12 மாநகராட்சிகளில் அமரப்போகும் மேயர் யார்? என்பதில்தான் தற்போதிருந்தே கடும் போட்டி நடந்து வருவதாக கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, கோவையில் இதற்கான குரல்கள் கொஞ்சம் கூடுதலாகவே ஒலிக்கிறது. அதில் 50-க்கும் மேற்பட்ட விஐபிக்கள் மேயர் நாற்காலி மீது கண் வைத்து அவரவருக்கு நெருக்கமான விஐபிக்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

1996-க்கு முன்புவரை கோவை அதிமுகவையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு விஐபி, தற்போது தனக்கு பதவியோ, கட்சிப் பொறுப்போ எதுவும் இல்லாத நிலையில் தனது ஜூனியர் பிரபலங்கள் சிலருக்கு தேர்தல் வேலைகளை செய்து நல்லவராக நடந்து கொண்டார். தற்போது தனக்கு இல்லாவிட்டாலும், தன் மனைவிக்காவது பெரிய பொறுப்பு வர வேண்டி, பதவிக்கு வந்துவிட்ட ஜூனியர் பிரபலங்களிடம் கோரிக்கை வைத்து வருகிறார்.

இதுகுறித்து கோவையை சேர்ந்த அதிமுக முக்கிய கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது:

உள்ளாட்சி மன்றத்தில் 50 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீடு இந்த தேர்தலில் அமலாக இருப்பதால் 12 மாநகராட்சி மேயர்களில் 6 பேர் பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டும். இதனால், கோவை மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்படும் என்று 90 சதவீதம் பேர் பேசி வருகிறார்கள். காரணம், 1996-ல் கோவை மாநகராட்சிக்கு நடந்த முதல் தேர்தலில் இருந்தே இது பொதுவானதாகவே உள்ளது. அந்த வகையில் 1996-ல் கோபாலகிருஷ்ணன் (தமாகா), 2001-ல் த.மலரவன் (அதிமுக), 2006-ல் காலனி வெங்கடாசலம் (காங்கிரஸ்), 2011-ல் செ.ம.வேலுச்சாமி (அதிமுக), 2014 இடைத்தேர்தலில் ராஜ்குமார் (அதிமுக) என ஆண்களே மேயர்களாக பதவி வகித்துள்ளனர். எனவே இந்த முறை பெண்களுக்கானதாக கோவை மேயர் பதவி அறிவிக்கப்படும் என்றே பெரும்பான்மை கவுன்சிலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இருந்தாலும், கோவையின் முன்னாள் மேயர்கள் செ.ம.வேலுச்சாமி, கோபாலகிருஷ்ணன் (முன்பு காங்கிரஸில் இருந்தவர் தற்போது அதிமுகவில் உள்ளார்), த.மலரவன் போன்றோர் அதற்கான முழு முயற்சியில் இறங்கியுள்ளனராம். அதேபோல், முன்னாள் அமைச்சர் ப.வே.தாமோதரன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.எஸ்.துரைமுருகன், கே.பி.ராஜூ, சேலஞ்சர் துரை, சிங்கை சின்னச்சாமி, தற்போதுள்ள மாநகராட்சி மண்டலத் தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் கே.ஆர்.ஜெயராமன், பிரபாகரன் போன்றோரும் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஒருவேளை கோவை மேயர் பதவி பெண்களுக்கு என்று அறிவிக்கப்பட்டால் அதற்கேற்ப தங்கள் குடும்பத்தில் இருந்து சிலரை பரிந்துரைக்க, இப்போதிருந்தே இந்த பட்டியலில் வரும் பெரும்பான்மையோர் தயார்படுத்தி வருகிறார்கள்.

தற்போதைய துணை மேயர் லீலாவதி உண்ணி, பெண் மேயர் என்று வரும்போது தானே பெற்றுவிடும் தீவிர முயற்சியில் உள்ளார். இப்படி மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் முயற்சிக் களத்தில் உள்ளனர். மேலும், சீட் தனக்கு கிடைப்பதற்கு முயற்சி செய்வதை விட தனக்கு கிடைக்க இருந்த சீட்டை கடைசி நேரத்தில் யாரும் தட்டிப்பறித்து சென்றுவிடக்கூடாது என்பதில்தான் பலரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

உதாரணமாக, ஒரு முறை கோவையில் உள்ள முக்கிய தொழிலதிபர் ஒருவருக்கே மேயர் சீட் முடிவு செய்யப்பட்டது.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட அரசியல் விஐபி ஒருவர் கடைசி நேரத்தில் மேலிட தேவையை முழுமையாக நிறைவேற்றி அந்த சீட்டை பெற்றுவிட்டார். அதனால், தற்போது நிலவும் கடும் போட்டிக் களத்தில் கடைசி நேரத்தில் அரசியல் காய்கள் எப்படி வேண்டுமானாலும் நகர்த்தப்படலாம். அதை வெல்ல இப்போதிருந்தே ஒவ்வொருவரும் தயாராகி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT