அமளியில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்களை வெளியேற்ற 9 காவல் அதிகாரிகளை சட்டப் பேரவை செயலாளர் நியமித்து இருந்தார்.
சட்டப்பேரவை சிறப்பு கூட்டத் தொடர் நேற்று நடைபெற்றது. இதில், நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்தது. முன்னதாக திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர் களை அவையில் இருந்து வெளியேற்றுவதற்காக 9 காவல் துறை அதிகாரிகளை சட்டப்பேரவை செயலர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் அழைத்தார்.
அதன்பேரில், கூடுதல் காவல் ஆணையர் சி.ஸ்ரீதர், இணை ஆணையர் சந்தோஷ் குமார், துணை ஆணையர் சுதாகர், உதவி ஆணையர்கள் ரவி, கோவிந்த ராஜ், சிவபாஸ்கர், முத்தழகு, தேவராஜ் ஆகியோரை பேரவை காவலர்களுக்கான உடையில் வரும்படி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, சில அதிகாரிகள் பேரவை காவலர்களுக்கான உடை அணிந்து பணி செய்தனர்.