கடனுக்காக வீட்டைவிட்டு வெளியேற்றியவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற தம்பதியை போலீஸார் காப்பாற்றினர்.
மதுரை அருகே கோவில்பாப்பா குடியைச் சேர்ந்தவர் சோணை முத்து. இவரது மனைவி மகா லட்சுமி. இவர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். ஆட்சியர் கார் நிறுத்துமிடம் அருகே வந்ததும், மறைத்து வைத்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெயை தங்கள் மேல் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.
அங்கு பாதுகாப்பிற்கு இருந்த போலீஸார் தடுத்து, இருவரையும் காப்பாற்றினர். போலீஸார் விசா ரணையில் இருவரும் கூறியது:
விளாங்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கினோம். கடனை முழுமையாக செலுத்த முடியாத நிலையில், எனது வீட்டு பத்திரத்தை கடன் வழங்கியவர் மிரட்டி எழுதி வாங்கினார். பின்னர் வீட்டைவிட்டு வெளியேற்றிவிட்டு பூட்டு போட்டனர். இது குறித்து அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர்.
இவர்களின் பிரச்சினையை முழுமையாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் உத்தரவிட்டார்.