தமிழகம்

குடிநீர் பிரச்சினையை தீர்க்காமல் ‘குடி’பிரச்சினைக்கு தமிழக அரசு முக்கியத்துவம்: திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வேதனை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினை யைத் தீர்க்காமல், டாஸ்மாக் மதுக் கடைகளைத் திறந்து ‘குடி’ பிரச்சினையைத் தீர்க்க தமிழக அரசு முற்பட்டிருப்பது வேதனையாக உள்ளது என்று திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் அவர் பேசியதாவது: ஜெய லலிதா இறந்த பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்டு, ஆட்சியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

வட்டாட்சியர் அலுவலகம் முதல் கோட்டை வரை எங்கும் லஞ்சம், முறைகேடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. டெல்லியில் போராட்டம் நடத்திய விவசாயி களை அழைத்துப் பேச மத்திய, மாநில அரசுகள் முன்வரவில்லை. அதனால்தான் நாளை (இன்று) விவசாயிகளுக்காக முழு அடைப்பு போராட்டத்தை நடத்துகிறோம்.

வைகை அணையில் தண்ணீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாக் கோல் பயன்படுத்தி, அதற்காக ரூ.10 லட்சம் செலவானது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித் துள்ளார். இப்படி ஒரு புத்திசாலி யான அமைச்சரைப் பார்க்க முடி யாது. இவர் ஏற்கெனவே ஜெய லலிதா இறந்த பிறகு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், ஜெய லலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என விதிகளுக்கு மாறாகப் பேசியவர்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து. மாநில சாலைகளை மாநகராட்சி, நகராட்சி வசம் ஒப்படைத்துவிட்டு, டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு முற்படுகிறது.

தமிழகத்தில் குடிநீர்ப் பிரச்சினையைக் கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் திமுக தீர்த்து வைத்தது.

ஆனால், இப்போதோ தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் ‘குடி’ பிரச்சினையை தீர்க்க அரசு முயல்வது வேதனையாக உள்ளது என்றார்.

காவலாளி கொலையிலும் மர்மம்

திருவாரூரில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலரிடம் நேற்று மனு அளித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘‘ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ளது போலவே, கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டதிலும் மர்மம் உள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அடிக்கடி ஓய்வெடுக்கச் சென்று தங்கியிருந்த கோடநாடு எஸ்டேட் தற்போது யார் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகளுக்கு கோடநாடு சம்பவமே உதாரணம் எனலாம்’’ என்றார்.

SCROLL FOR NEXT