கூடங்குளம் முதல் அணு உலையில் இதுவரை 13,197 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முதல் அரையாண்டு தணிக்கை அறிக்கையின்படி ரூ.1,000 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது என்று அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் குடியரசு தின விழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் ஆர்.எஸ்.சுந்தர் பேசியதாவது:
கூடங்குளம் முதலாவது அணு உலையில் இதுவரை 13,197 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி முதல் 278 நாட்களுக்கு தொடர்ச்சியாக மின் உற்பத்தி நடை பெற்றுள்ளது. முதல் அரையாண்டு தணிக்கை அறிக்கையின்படி ரூ.1,000 கோடி லாபம் ஈட்டப்பட்டுள்ளது.
இங்கு உள்ள 2-வது அணு உலை யில் கடந்த 21-ம் தேதி மின் உற்பத்தி 1,000 மெகாவாட்டை எட்டியது. வணிக ரீதியான மின் உற்பத்திக்கு முன்னதாக ஒருசில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. 2-வது அணு உலையில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும்போது நாட்டில் உற்பத்தியாகும் அணு மின் சாரத்தின் அளவு 6,780 மெகாவாட்டாக அதிகரிக்கும். கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணு உலைகளை அமைப்பதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வெகுவிரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றார்.