தமிழகம்

விடுதலைப் புலிகள் இயக்க தடை விதிப்பு தீர்ப்பாய விசாரணை: வைகோ பங்கேற்கிறார்; போலீஸார் குவிப்பு

செய்திப்பிரிவு

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை குறித்த தீர்ப்பாய விசாரணை இன்றும் நாளையும் குன்னூரில் நடைபெறுகிறது. விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 5 ஆண்டுக்கு ஒரு முறை தீர்ப்பாயத்தின் மூலம் விசாரணை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட் டதைத் தொடர்ந்து இந்த இயக்கத் துக்கு தடை விதிக்கத் தேவை யில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பழ.நெடுமாறன், திருமாவளவன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ள தோடு, தீர்ப்பாயத்தில் நடந்துவரும் விசாரணையிலும் தங்களது நிலையை எடுத்துக் கூறி வருகின்றனர்.

கடந்த மாதம் சென்னையில் தீர்ப்பாய விசாரணை நடந்த நிலையில், குன்னூரில் இதன் விசாரணை இன்றும், நாளையும் (அக். 26, 27) நகர்மன்ற கூட்ட அரங்கில் நடக்கிறது.

உச்ச நீதிமன்ற நீதிபதி மிட்டல் முன்னிலையில் நடக்கும் விசாரணையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். இதற்காக நேற்று மாலை வைகோ குன்னூர் வந்துள்ளார்.

தமிழக அரசு சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காவல் அதிகாரிகள் மற்றும் உளவுத் துறை அதிகாரிகள் 35 பேர் இந்த அமைப்புக்கு தடை விதிப்பது தொடர்பாக தங்களது கருத்துகளை எடுத்துக்கூற உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் இலங்கை தமிழர்கள் அதிகளவில் வசித்து வருவதால் இந்த விசாரணையில் தமிழ் ஆர்வலர்களும் பங்கேற்று கருத்துகளை எடுத்து கூற உள்ளதாகத் தெரிகிறது. இந்த விசாரணையையொட்டி வைகோ, உச்ச நீதிமன்ற நீதிபதி மிட்டல் ஆகியோர் தங்கியுள்ள தங்கும் விடுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குன்னூர் நகர்மன்ற வளாகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. விசாரணை முடியும் வரை நகராட்சி அலுவலகத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மேற்பார்வையில் உள்ளூர் போலீஸார் மட்டுமல்லாமல் அதிரடிப் படை போலீஸாரும் ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றனர். தீர்ப்பாய கூட்டம் காரணமாக அவ்வழியாகச் செல்லும் அனைத்து வாகனங்களும் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT