தமிழகம்

கூடுதலாக 2,000 பொதுச் சேவை மையங்கள்: தமிழக அரசு

செய்திப்பிரிவு

சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட அரசுச் சேவைகளை வழங்க கூடுதலாக 2,000 பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2014-15 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்பு:

சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்ட அரசுச் சேவைகளை, பொதுச் சேவை மையங்கள்

மூலமாக வழங்குவதற்கான மின் ஆளுமை மாவட்டத் திட்டம், 66.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 2013-2014 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

ஊரகப் பகுதிகளில் 2,100-க்கும் மேலான பொதுச் சேவை மையங்கள் தனியார் - பொது பங்களிப்பு முறையிலும், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவும் தற்போது இயங்கி வருகின்றன. கூடுதலாக, 2,000 பொதுச் சேவை மையங்கள் தனியார் - பொது பங்களிப்பு முறையில், 2014-2015 ஆண்டில் தொடங்கப்படும்.

அனைத்துக் கிராமங்களிலும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது கிராம ஊராட்சிகள் மூலமாகவோ பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதை இந்த அரசு உறுதி செய்யும்.

நகர்ப்புறங்களில் சொத்து வரி, மின்கட்டணம், குடிநீர் மற்றும் கழிவு நீர் அகற்றல் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகளையும்,

கட்டணங்களையும் பொது மக்கள் ஒரே இடத்தில் செலுத்திட வசதியாக, சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் நகர்ப்புர பொதுச் சேவை மையங்களை தமிழ்நாடு முதல்வர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த பொதுச் சேவை மையங்கள் பொது மக்களுக்கான மின்னணுச் சேவைகளையும், பிற சேவைகளையும் வழங்கும். சென்னை மாநகரத்தில் மேலும் இது போன்ற 200 பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

தகவல் தொழில்நுட்பத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட மின் ஆளுமைச் சங்கங்கள் மூலம் இந்தப் பொதுச் சேவை மையங்கள் நிருவகிக்கப்படும்.

SCROLL FOR NEXT