தமிழகம்

நெடுஞ்சாலை மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவு: வைகோ வரவேற்பு

செய்திப்பிரிவு

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், ''நெடுஞ்சாலை ஓரங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு உள்ளே இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநில அரசுகள் மேல்முறையீடு செய்தன.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 20 ஆயிரம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள இடங்களில் 500 மீட்டர் என்பதை 220 மீட்டராக குறைத்துள்ளது. மற்ற இடங்கள் அனைத்திலும் 500 மீட்டர் தொலைவுக்குள் எந்த மதுக்கடையும் இருக்கக் கூடாது என்று கூறி உள்ளது வரவேற்கத்தக்கது.

'கலிங்கப்பட்டி ஊராட்சி மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, கலிங்கப்பட்டியில் உள்ள மதுக்கடையை அகற்ற வேண்டும்' என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், கலிங்கப்பட்டியில் மூடப்பட்ட மதுக்கடையை திறக்க அனுமதி கிடையாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றம் அறிமுக நிலையிலையே தமிழக அரசின் கோரிக்கை மனுவை நிராகரித்தது. இந்தத் தீர்ப்பு, ஊராட்சி அமைப்புக்கு உள்ள அதிகாரத்தை நிலைநாட்டி உள்ளது.

எனவே, உள்ளாட்சி மன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் உண்மையிலேயே மதுக்கடைகளை ஒழிப்பார்கள் என்று யார் மீது நம்பிக்கை இருக்கிறதோ அவர்களுக்கு வாக்கு அளிக்கும் நிலை ஏற்பட்டால், மாநில அரசு தடுத்தாலும் மதுக்கடைகளை ஒழித்துவிட முடியும்'' என்று வைகோ தெரிவித்தார்.

SCROLL FOR NEXT