தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சரைக் கண்டித்து திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியில் தண்ணீர் தர மறுப்பதாக கர்நாடக அரசையும், காவிரி மேலாண்மை வாரியம், நதிநீர் பங்கீட்டுக் குழுவை அமைக்கவில்லை என்று கூறி மத்திய அரசையும் கண்டித்து, தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே கடந்த 30-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த அமைப்பின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதி நாளான நேற்று, திடீரென அதே பகுதியில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றதால், இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு நேரிட்டது. பின்னர், விவசாயிகள் சாலை மறியலைக் கைவிட்டு, உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
இதுகுறித்து அய்யாகண்ணு கூறும்போது, “கடந்த 2 நாட்களுக்கு முன் ஈரோட்டில் நடைபெற்ற விழாவில், மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன், விவசாயிகள் குறித்து தவறாகப் பேசியுள்ளார். எனவே, அவரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டோம். அவரைப் பதவியிலிருந்து நீக்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்” என்றார். விவசாயிகளின் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நேற்று மாலையில் முடிவுக்கு வந்தது