எண்ணூரின் எண்ணெய் கசிவு விவகாரத்தில் உடனடி நடவடிக்கைக் கோரி மாநிலங்களவையின் திமுக அவைத்தலைவர் கனிமொழி, 4 மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதில், மத்திய அரசு தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணத்தொகையும் அளிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.
இது குறித்து மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு எழுதிய கடிதத்தில் கனிமொழி, "எண்ணெய் கசிவினால் சுமார் 24 கி.மீ தொலைவிற்கு சுற்றுச்சூழல் மற்றும் கடற்புற வாழ்க்கை மாசுபட்டுள்ளது. இதனால், மீன் மற்றும் ஆமைகள் உயிரிழந்து முக்கிய சுற்றுச்சூழல் அமைப்பு சரிசெய்யாத அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் அன்றாட தொழில், அவர்கள் உடல்நலம் மற்றும்பாதுகாப்பும் கவலைக்குரியதாகி உள்ளது.
இவற்றை கடலோரக் காவல் அல்லது காமராஜர் துறைமுகம் ஆகிய இருவரில் சுத்தம் செய்வது யார் என்ற குழபமும் நிலவுகிறது. இதன் மீதான நாளிதழ் செய்திகளில், முறையில்லாத கருவிகள் மற்றும் உகந்த பயிற்சியற்ற பணியாளர்களால் சுத்தப்படுத்தும் முயற்சி தாமதப்படுவதாக வெளியாகி உள்ளன. அங்குள்ள பொதுமக்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இதற்கு உதவி முயல்கின்றனர்.
இதில் மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த கசிவின் காரணம் குறித்து விசாரணை அமைப்பதுடன், எதிர்காலத்தில் இதுபோல் நிகழாமல் ஆலோசனை அளிக்கும்படியும் கோருகிறேன். இப்பணியில், உள்ளுர் மீனவர்கள் ஆலோசனையில் தலையிட்டு விரைந்து முடிக்கும்படி எண்ணூர் துறைமுகத்திற்கு உத்தரவிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.
இதன் நகலை மத்திய கப்பல் மற்றும் தரைவழிப்போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.இராதாகிருணனுக்கும் கனிமொழி அனுப்பியுள்ளார்.
மத்திய விவசாயத்துறை அமைச்சரான ராதா மோகன் சிங்கிற்கும் இந்த பிரச்சனையில் கனிமொழி கடிதம் எழுதியுள்ளார். அதில், கசிவினால் பாதிக்கப்பட்ட மீனவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் அணில் மஹாதேவ் தாவேவிற்கு கசிவு பிரச்சனையில் கடிதம் அனுப்பியுள்ளார் கனிமொழி. அதில், கசிவின் மீதான கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் எனவும், அதில் உள்ளூர் சமூக தலைவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஆலோசனையையும் பெற வேண்டும்" என்றும் வலியுறுத்தி உள்ளார்.