தமிழக முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வெளியான நாளிலிருந்து அவரை ஆதரித்து போஸ்டர்களை ஒட்டுவது தமிழகத்தில் அதிகரித்து வருகி றது. இதனால் லித்தோ அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அரசியல் விழாக்களில் ஆரம்பித்து காதுகுத்து, கல்யாணம் என்று தமிழகத்தின் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு லித்தோ போஸ்டர்களை அடித்து ஒட்டுவது வழக்கமாக இருந்து வருகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தத் தொழிலை நம்பி 50 ஆயிரத்துக்கும் அதிகமான குடும் பங்கள் உள்ளன.
இந்நிலையில் சில ஆண்டு களுக்கு முன்பு வந்த வினைல் பிளெக்ஸ் போர்டுகள் காரணமாக லித்தோ போஸ்டர்களின் செல்வாக்கு சரிந்தது. இதனால் இத்துறையில் ஈடுபட்டிருந்தவர்கள் பலரும் தங்கள் அச்சகத்தை மூடிவிட்டு வேறு தொழில்களைச் செய்ய ஆரம்பித்தனர்.
தேர்தல் சமயங்களிலும், முக்கிய அரசியல்வாதிகளின் பிறந்த நாளின்போதும் மட்டுமே லித்தோ அச்சகங்களுக்கு வருமானம் கிடைத்தன. இந்நிலையில் கடந்த இரண்டு வார காலமாக தமிழகத்தில் லித்தோ பிரஸ்களில் மீண்டும் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து அவருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுகவினர் விதவிதமான போஸ்டர்களை ஒட்டி வருவதே இதற்கு காரணம்.
அதிமுகவினர் மட்டுமன்றி திரைத்துறையினர், வணிக அமைப்புகள், ஜாதி சங்கங்கள் போன்றவையும் முன்னாள் முதல்வருக்கு ஆதரவாக போஸ் டர்களை ஒட்டி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் போஸ்டர் வியாபாரம் சூடுபிடித்துள்ளதால் அச்சக உரிமையாளர்கள் மகிழ்ச்சி யில் உள்ளனர்.
அச்சக கூட்டமைப்பு நிர்வாகி கருத்து
இதுபற்றி மெட்ராஸ் அச்சக உரிமையாளர்கள் மற்றும் லித்தோகிராபர்கள் கூட்டமைப் பின் செயலாளர் விஸ்வகுமார் கூறும் போது,
“வினைல் போர்டுகள் வந்த பிறகு லித்தோ போஸ்டர் களை ஒட்டுவது குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக நிறைய பேர் போஸ்டர்களை ஒட்ட ஆரம்பித் துள்ளனர். ஆனால் இதைப் பார்த்து எங்கள் வியாபாரம் பெரியளவில் முன்னேறிவிட்டதாக நினைக்க வேண்டாம். ஏனென்றால் இது பரவலாக நடக்கவில்லை.
ஒரு சில பிரஸ்களில் மட்டும் முன்பிருந்ததை விட இந்த வியாபாரம் ஓரளவு சூடுபிடித்துள்ளது. இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்றும் சொல்ல முடியாது” என்றார்.