தமிழகம்

மனைவி, மகளுடன் கோபாலபுரம் வந்தார் அழகிரி: கருணாநிதியை சந்திக்கவில்லை

செய்திப்பிரிவு

திமுக தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, தனது குடும்பத்தினருடன் திமுக தலைவர் கருணாநிதியின் இல்லத்துக்கு புதன்கிழமை வந்தார். ஆனால், கருணாநிதி ஓய்வில் இருந்ததால் அவரை மு.க.அழகிரியால் சந்திக்க முடியவில்லை.

சமீபத்தில், தனியார் தொலைக்காட்சிக்கு மதுரையில் பேட்டியளித்த அழகிரி, தேமுதிகவுடனான கூட்டணி குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இதற்கு திமுக தலைமை வட்டாரத்தில் எதிர்ப்புக் கிளம்பியது.

இதையடுத்து, ’அழகிரியின் கருத்து வருந்தத்தக்கது, கண்டிக்கத்தக்கது என்றும், கட்சி கட்டுப்பாட்டை மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ்திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை கூறினார்.

இந்நிலையில், அழகிரி தனது மனைவி காந்தி அழகிரி, மகள் கயல்விழியுடன் புதன்கிழமை காலை 10.45 மணிக்கு கோபாலபுரம் இல்லம் வந்தார். அரை மணி நேரத்துக்குப் பின் அங்கிருந்து திரும்பினார். அவரை தாய் தயாளு அம்மாள் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

அப்போது பத்திரிகை யாளர்கள் அவரை சூழ்ந்து பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால் எதுவும் பேசாமல் மவுனமாக அழகிரியும், அவரது குடும்பத்தினரும் சென்றுவிட்டனர்.

இந்த சந்திப்பு குறித்து, திமுக தலைமை வட்டாரத்தில் விசாரித்தபோது, ’திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஒரு வாரமாக சிறிது உடல்நலமில்லாமல் உள்ளார். புதன்கிழமையன்று மருந்து எடுத்துக் கொண்டு, ஓய்வில் இருந்ததால், அழகிரி குடும்பத்தினர்,தயாளு அம்மாளிடம் சிறிது நேரம் பேசிவிட்டு சென்றுள்ளனர். கருணாநிதியை சந்திக்க முடியவில்லை’ என்றனர்.

SCROLL FOR NEXT