சென்னையில் எஸ்.எம்.எஸ் ஆட்டோ என்ற சேவை வரும் வியாழக்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏ.ஐ.டி.யு.சி அமைப்பைச் சேர்ந்த சுமார் 1000 ஆட்டோக்கள், இந்த சேவையில் இணைந்துள்ளன. இதன் மூலம், பயணிகளுக்கு ஆட்டோ தேவைப்படும்போது, ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினால் போதும். அவர்களது வீட்டிற்கே ஆட்டோ வந்து ஏற்றிச் செல்லும். இது குறித்து இந்தத் தொழில்நுட்பத்திற்கான ஆலோசகர் நவநீதன் கூறியதாவது:
"இந்தச் சேவையைப் பெற விரும்பவர்கள், தங்களது பகுதியின் பின்கோடு மற்றும் தாங்கள் பயணப்பட விரும்பும் இடத்தின் பெயரை 9944733111 என்ற எண்ணிற்கு அனுப்பவேண்டும். உதாரணம், நீங்கள் அண்ணாசாலையிலிருந்து தி.நகருக்கு பயணப்பட விரும்பினால் '600002 (ஸ்பேஸ்) தி.நகர்' என எஸ்.எம்.எஸ் அனுப்பவேண்டும்.
அடுத்த 15 நொடிகளில், உங்களுக்கு அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களின் தொலைப்பேசி எண்கள் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பப்படும். பயணிகள் தாங்களாகவே ஓட்டுநரைத் தொடர்பு கொள்ளலாம். தங்கள் இடத்திற்கு சேர்ந்தபின் மீட்டர் தொகையுடன் கூடுதலாக ரூ.10 மட்டும் செலுத்தினால் போதுமானது.
இதனால் பயணிகள் ஓட்டுநர்களிடம் பேரம் பேசும் தேவை இருக்காது. வெயிலில் காத்திருப்பதும் தவிர்க்கப்படும். சவாரி முடிந்த பின், ஆட்டோ ஓட்டுநர்களும், தாங்கள் அடுத்த சவாரிக்குத் தயாரா என எஸ்.எம்.எஸ் மூலம் தெரிவிக்கவேண்டும். அனைத்து ஓட்டுநர்களும் எங்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள்" என்றார் நவநீதன்.
"பயணிகளை இறக்கிவிட்ட பின், ஓட்டுநர் எங்களுக்கு குறிப்பிட்ட குறியீட்டு எண்ணை அனுப்பினால், அவர் இருக்கும் பகுதியைப் பற்றி எங்களுக்குத் தெரியவரும். தொடர்ந்து அவரது தொலைப்பேசி எண், அந்தப் பகுதியில் இந்தச் சேவையைப் பெற விழைபவர்களுக்கு அனுப்பப்படும்" என ஏ.ஐ.டி.யு.சி இணைக்கப்பட்டுள்ள மெட்ராஸ் மெட்ரோ ஆட்டோ ஓட்டுநர்கள சங்கத்தின் செயலாளர் ஜெ. சேஷய்யன் தெரிவித்தார்.
வரும் வியாழக்கிழமை முதல் (10/04/2014) இச் சேவை தொடங்குகிறது. இது தொடர்பான வழிகாட்டுதல் மற்றும் தகவல்களுக்கு 4555 4666 என்ற கஸ்டமர் கேர் எண்ணை பயணிகள் தொடர்பு கொள்ளலாம்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தாலும், இதன் செயலாக்கம் எவ்வளவு சிறப்பாக இருக்கும் என்பதில் பலருக்கு சந்தேகம் உள்ளது. அடையாரைச் சேர்ந்த சேஷாத்ரி பேசுகையில், "இது வயதானவர்களுக்கு கண்டிப்பாக உதவிகரமாக இருக்கும். ஆனால், இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களின் எண்ணிக்கை போதுமானதாக இருப்பதாகத் தெரியவில்லை" என்றார்.