துப்பாக்கி, கத்தி பறிமுதல் ; கூட்டாளிகள் 4 பேர் குறித்து தீவிர விசாரணை
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிடம் தொடர்பு வைத்துள்ளதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர், திருப்பூரில் 6 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. அவரிடம் இருந்து கத்தி, துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது கூட்டா ளிகள் 4 பேர் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
மளிகை கடை
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறியதாவது: மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டம் லாபூரைச் சேர்ந்தவர் முகமது மொஷிருதின் (எ) முஷா(25). மத்திய அரசால் தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார். இவர், திருப்பூர் மங்கலம் சாலை ஆண்டிபாளையம் கோழிப்பண்ணை பகுதியில் கடந்த 6 ஆண்டுகளாக தங்கி இருந்தார். மனைவி ஷாகிதா(26). இவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந் தவர். காதல் திருமணம் செய்துள் ளனர். தம்பதியருக்கு 2 குழந் தைகள். மங்கலம் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் மூத்த குழந் தையை சேர்த்து படிக்க வைத்துள் ளனர்.
இந்நிலையில், மளிகைக் கடை நடத்தி வியாபாரம் செய்து வந்துள் ளார் மொஷிருதின். கடையிலேயே குடும்பத்துடன் தங்கி, யாருக்கும் சந்தேகம் அளிக்காத வகையில், மிகவும் சாதாரணமாக வாழ்ந்து வந்துள்ளார். திருப்பூருக்கு வந்த பிறகு தம்பதியர் ஓரளவு தமிழ் கற்றுக்கொண்டனர்.
மளிகைக் கடை வைத்திருந்த பகுதியிலும் பிஹார் மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பனியன் தொழிலாளர்கள் நூற்றுக்கணக் கானோர் குடியிருந்து வந்ததால், இவர்களது நடத்தையில் எந்த சந்தேகமும் யாருக்கும் எழவில்லை என்கின்றனர் அப்பகுதியில் வசிப்பவர்கள்.
மேலும், அவரது அண்ணன் அசதுல்லா என்பவர் அப்பகுதியில் உள்ள மாட்டுத்தொழுவம் ஒன்றில் வேலை பார்த்து வந்ததாகவும், அந்த அடிப்படையில்தான் அவர் தமிழகத்துக்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஐஎஸ்ஐஎஸுடன் தொடர்பு
இந்நிலையில், தனது மனைவி மற்றும் குழந்தைகள் கோழிப் பண்ணை பகுதியில் வீட்டில் இருக்க, முகமது மொஷிருதின் மட்டும் மேற்கு வங்கத்துக்கு சென்றுள்ளார். அப்போது அவரை கடந்த 5-ம் தேதி இரவு மேற்கு வங்க மாநில குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
ரகசிய விசாரணை
நேற்று முன்தினம் இரவு, அவரது அண்ணன் அசதுல்லா, மொஷிருதின் குடும்பத்தார் உட்பட மளிகைக் கடையில் அவருக்கு உதவியாளராக வேலை பார்த்து வந்த இளைஞர் ஷவாஸ் என்பவரிடம், மத்திய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் எப்போதில் இருந்து தொடர்பு வைத் துள்ளார், வேறு ஏதேனும் அமைப்பு களுடன் தொடர்பு வைத்துள் ளாரா என்பது குறித்தும் விசாரிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு மாதம் கண்காணித்து கைது
இதுகுறித்து மத்திய உளவுத் துறை போலீஸார் கூறியதாவது: மொஷிருதின் கடந்த 6 ஆண்டு களாக திருப்பூரில் தங்கியுள்ளார். கடந்த ஒரு மாதமாக இவரது நடவடிக்கைகளை கண்காணித்து தான் கைது செய்துள்ளனர். கடையில் வேலைபார்த்த உதவியாளர், மனைவி மற்றும் அண்ணன் குடும்பத்தினர் என யாருக்கும் இவரைப் பற்றி தெரியவில்லை.
சிரியாவில் இருந்து அழைப்புகள்...
மேற்கு வங்கத்தில் மொஷிருதினிடம் மாநில சிஐடி, என்ஐஏ மற்றும் ஐபி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக சிஐடி அதிகாரி ஒருவர் கூறும்போது, “மொஷிருதின் கைப்பேசியை ஆராய்ந்தபோது, அவருக்கு சிரியா, இராக், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து அழைப்புகள் வந்துள்ளதை கண்டோம். மொஷிருதினுடன் தொலைபேசியில் பேசிய நபர்கள் யார், எதற்காக பேசினர் என்பதை அறிய முயன்று வருகிறோம். விசாரணையில் ஐ.எஸ் மற்றும் ஜமாத்-உல்-முஜாகிதீன் (பங்களாதேஷ்) தீவிரவாத அமைப்புகளுடன் மொஷிருதினுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது” என்றார்.