தமிழகம்

சசிகலா விதிகளின்படி 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது: முத்தரசன்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த வி.கே.சசிகலா விதிகளின்படி பத்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாதவராகிவிட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உச்ச நீதிமன்றம் மிகுந்த மதிப்புக்குரியது. அதன் தீர்ப்பு அமுலாக்கப்பட வேண்டும். பொதுவாழ்வில் (நேர்மையற்ற) முறை தவறிய போக்குகளைக் கண்டறிந்து தண்டனை தர இவ்வளவு நீண்டகாலம் தேவைப்படுவது கவலையளிப்பதாகும்.

பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் நேர்மை தவறிநடந்து கொள்வதால், அரசியலே வியாபாரம் போல் ஆகிவிட்டது. இதனால் பொதுமக்களுக்கு அரசியல் மீது வெறுப்பு தோன்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய தீர்ப்புகள் தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்துகின்றன.

ஏற்கெனவே ஆளும் கட்சி உறுப்பினர்களால் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த வி.கே.சசிகலா விதிகளின்படி பத்து ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாதவராகிவிட்டார். எனவே வேறு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுப்பது அக்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் பொறுப்பாகும்.

சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நிலவ, அரசியல் சாசனம் வகுத்துள்ளபடி உரிய நடவடிக்கைகளை ஆளுநர் காலதாமதமின்றி எடுக்கவேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT