அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பிரிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர், அந்த முயற்சி பலிக்காது என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்தார்.
கோவையில் நிருபர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:
மனித உரிமை மீறல்
இருநூறுக்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிறைப் பிடித்தும், 70 படகுகளை இழுத்துச் சென்றும், இலங்கை அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்த பின்னர்தான் இதுபோன்ற பிரச்சினைகள் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. எனவே, கச்சத்தீவை மீட்பதுடன், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களையும் மீட்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சிறைகளில் குறிப்பாக, கோவை மத்திய சிறையில் குற்றங்கள் பதியப்படாமல், விசாரணை இல்லாமல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் அடைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமை மீறிலாகும்.
சிறைவாசிகளை விடுவிக்க..
தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள தமிழர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற, இடதுசாரி கட்சிகள் கோருகிற மாற்று ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடைவிடாது முயற்சிக்கும்.
தமிழகத்தில் வறட்சி நிவாரணம், கோமாரி நோய் தடுப்பு போன்ற பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கடம் இல்லை
அதிமுக பொதுக்குழுவில் தனித்துப் போட்டி என்று அறிவித்திருக்கிறார்கள். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணி குறித்து அதிமுக பகிரங்கமாக அறிவிக் காததில் எந்த சங்கடமும், வேதனையும் இல்லை. ஏனெனில், அவர்களை நன்கு புரிந்து வைத்திருக்கிறோம்.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் 5 பேரை அதிமுக அறிவித்தது. கோரிக்கையை ஏற்று ஒருவரை வாபஸ் பெற்று ஆதரவு கொடுத்தார்கள். அதுபோல், மக்களவைத் தேர்தலில் எங்கள் கோரிக்கை ஏற்கப்படும் என்றார் தா.பாண்டியன்