சேலம் மாவட்டம் கோவிந்தபாடியைச் சேர்ந்த மீனவர் பழனி, ராஜா, முத்துசாமி ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காட்டுக்குள் வேட்டையாடச் சென்றபோது, கர்நாடக வனத்துறையினர் வேட்டை கும்பலை சுற்றி வளைத்தனர். கர்நாடக வனத்துறையினரிடமிருந்து தப்ப முயன்ற அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இதில் உயிர் தப்பி வந்த ராஜா, முத்துசாமி ஆகியோர் கொடுத்த தகவலின்பேரில் மாயமான பழனியைத் தேடும் பணியில் தமிழக போலீஸார் ஈடுபட்டனர். பாலாறு காவிரி ஆற்றில் காயங்களுடன் பழனி உடல் கண்டெடுக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் கர்நாடக வனத்துறை செக்போஸ்ட்டை அடித்து சூறையாடி, தீ வைத்தனர். இறந்த பழனியின் மனைவி கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலை போலீஸில், கர்நாடக வனத்துறையினர் மீது புகார் செய்தார்.
சோதனைச் சாவடியில் இருந்த 4 துப்பாக்கிகள் மற்றும் ஒரு யானை தந்தத்தை பொதுமக்கள் எடுத்துச் சென்றுவிட்டதாக கர்நாடக வனத்துறையினர், மாதேஸ்வரன் மலை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இந்நிலையில், தமிழக வனப்பகுதியான பாலாறு நெட்டகாளன் கொட்டாய் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 4 துப்பாக்கிகள் மற்றும் யானை தந்தம் கிடப்பதாக அறிந்த போலீஸார் அவற்றை மீட்டு, நேற்று காலை மேட்டூர் குற்றவியல் நீதிமன்றம் எண்.1-ல் மாஜிஸ்திரேட் பாக்கியராஜியிடம் ஒப்படைத்தனர்.