மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப்பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வியாழக்கிழமையன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னையில் மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்திருக்கிறார். ரூ. 14,600 கோடிக்கான திட்டம் அது. இதைத் தொடங்கி வைத்த முதல்வர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திட்டத்திற்கு நேரிலே வந்து தொடங்கி வைத்திருக்கிறார். அந்தத் திட்டத்தைப் பற்றி விழாவிலே பேச வேண்டுமென்றால் அந்தத் திட்டம் எந்த ஆட்சியில், எந்த ஆண்டு தொடங்கப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் கூற வேண்டும்.அந்தத் திட்டம் தி.மு.க., ஆட்சியில், நான் முதலமைச்சராக இருந்தபோது தொடங்கப்பட்டது.
இத்திட்டம் என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் சிறப்பு முயற்சித் திட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலின் பொறுப்பிற்கு மாற்றப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான மதிப்பீடு ரூ. 14,600 கோடி. திட்டச் செலவில் 59 சதவீதம், ஜப்பான் அரசின் அனைத்து நாடுகள் கூட்டுறவுக்கான அமைப்பின் நிதி உதவி மூலம் பெறப்படும். இதற்கு கடன் வழங்குவதற்கான ஒப்பந்தம், மத்திய அரசுக்கும் ஜப்பான் அரசுக்கும் இடையே 2008 நவம்பரில் டோக்கியோ நகரில் கையெழுத்தானது. மத்திய அரசு திட்டச் செலவில் 15 சதவீதத்தை பங்குத் தொகையாகவும், 5 சதவீதத்தைக் கடனாகவும் வழங்கும். மாநில அரசின் பங்கு 15 சதவிகிதம் மற்றும் 5.78 சதவிகித சார்நிலைக் கடனாக வழங்கும்.
மெட்ரோ ரயில் பணிகளை தொழில் ரீதியில், மெட்ரோ ரயில் நிறுவனம், சிறப்பாகச் செய்து வருகிறது. மெட்ரோ ரயில் திட்ட விரிவாக்கம் நடைபெற வேண்டுமென்றால், அதுகுறித்த ஆய்வுகள் இப்போதே மேற்கொள்ளப் படவேண்டும். இந்த ஆய்வுப் பணி 18 மாதங்களை எடுத்துக் கொள்ளும். மத்திய அரசு, நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழக அரசு ஆகியவற்றின் அனுமதிகளைப் பெற மேலும் 18 மாதங்கள் ஆகும்.
இத்திட்டத்தை திருவொற்றியூர் வரை விரிவாக்கம் செய்வது பற்றியும், மாநிலஅரசு மவுனமாக இருப்பது கவலை அளிக்கிறது. திட்டமிடப்பட்ட காலத்திற்குள் பணிகள் முடிவடையாமல் தாமதம் ஆவதும், திட்டத்தை சீர்குலைப்பதாக ஆகிவிடும். மெட்ரோ திட்டத்தினைப் பொறுத்தவரையில், நேரம்தான் பணம். ஒருநாள் இழப்பு என்பது பல கோடி ரூபாய் இழப்பாகும்.
எனவே, தமிழக அரசு உடனடியாக மெட்ரோ ரயில் திட்டப் பணிகளின் இரண்டாவது கட்டம் மற்றும் மூன்றாவது கட்டப் பணிகளை விரிவுபடுத்த வேண்டும்.