வியாசர்பாடியில் தந்தையுடன் பைக்கில் சென்ற 5 வயது சிறுமி லாரி மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடி புது மெக்சின் புரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார். இவருடைய மகள் யுகேஜி படிக்கும் பிரியதர்ஷினி(5). நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் பிரேம்குமார் தனது மகளுடன் பைக்கில் வெளியே சென்றார்.
அம்பேத்கார் சிலை அருகே ஆந்திரா வில் இருந்து கருங்கல் ஏற்றி வந்த லாரி ஒன்று, பைக் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரங்கள் பிரியதர்ஷினி மீது ஏறியதில் சிறுமி உயிரிழந்தாள்.
விபத்து நடந்தவுடன் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்தில் திரண்டு மறியல் செய்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியை அடித்து உடைத்து தீ வைத்தனர். அந்த லாரியின் பின்னால் வந்த மேலும் சில லாரிகளையும் பொதுமக்கள் அடித்து உடைத்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீ ஸார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத் தினர். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததைத் தொடர்ந்து, போலீஸார் தடி யடி நடத்தி கலைத்தனர். விபத்து குறித்து கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் சோனாராம் நேற்று காலை வியாசர்பாடி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.