தமிழக அரசின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டன. மதுவகைகள் குடோனுக்கு எடுத்து செல்லப்பட்டதால், குடிமகன்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்றும் வகையில், மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணியாக மாற்றியும், தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகளை மூடவும் முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதன்படி, கடந்த 24-ம் தேதி முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணிக்கு பதிலாக 12 மணிக்கு திறக்கப்பட்டு வருகின்றன. மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடியிருப்பு பகுதிகள், நெடுஞ்சாலைகள், கோயில் மற்றும் பள்ளிகளுக்கு அருகேயுள்ள கடைகள், விற்பனை குறைவாக உள்ள கடைகள், மதுக்கூடங்கள் இல்லாத கடைகள், ஒரே இடத்தில் அருகருகே உள்ள கடைகள் போன்றவற்றை கணக்கில் எடுத்து அவற்றை மூட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
பரிந்துரைப் பட்டியலை ஆய்வு செய்து, மூடப்பட வேண்டிய 500 கடைகளை இறுதி செய்து, அது தொடர்பான அறிவிப்பை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ்குமார் நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். மண்டல வாரியாக சென்னை 58, கோவை 60, மதுரை 201, திருச்சி 133, சேலம் 48 கடைகள் என மொத்தம் 500 கடைகள் தமிழகம் முழுவதும் நேற்று மூடப்பட்டன.
சென்னையில் கே.கே.நகர் நெசப்பாக்கம் கடை எண் - 634, ஸ்பென்சர் வணிக வளாகத்தில் உள்ள கடை எண் - 333, பாரிமுனையில் கடை எண் - 103, பெரம்பூரில் கடை எண் - 290, வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகேயுள்ள கடை எண் - 713 ஆகியவை மூடப்பட்டுள்ளன. கோயம்பேடு மார்க்கெட் அருகே ஒரே இடத்தில் 4 கடைகள் இருந்தன. அதில் கடை எண் 412 மற்றும் 417 மூடப்பட்டுள்ளன.
இது மட்டுமன்றி சென்னை புறநகரில் ஆலந்தூர், பரங்கிமலை, பல்லாவரம், செம்பாக்கம், கந்தன்சாவடி, பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம், கூடுவாஞ்சேரி தைலாவரம், மணிமங்கலம், மேடவாக்கம், ஆவடி, செங்குன்றம், மாதவரம், திருவொற்றியூர், வானகரம், புழல், புழல் குளக்கரை தெரு, மதுரவாயல், நாவலூர் சாலை ஆகிய இடங்களில் தலா ஒரு கடை மூடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று இந்தக் கடைகளுக்கு மது வாங்க வந்த குடிமகன்கள் ஏமாற்றம் அடைந்தனர். மூடப்பட்ட கடைகளில் இருந்த மது வகைகள், லாரியில் ஏற்றி குடோனுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. 500 கடைகள் மூடப்பட்டதால் அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்தக் கடைகளில் பணியாற்றிய சுமார் 2 ஆயிரம் பேர், சம்பந்தப்பட்ட மண்டலத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலியாக உள்ள இடங் களில் பணியில் அமர்த்தப்பட்ட னர். நிறைய பேர் டாஸ்மாக் குடோன்களில் பணியமர்த்தப் பட்டனர். இவர்களுக்கு டாஸ்மாக் அல்லாத மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்று ஊழியர் சங்கத்தி னர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுவிலக்குக்காக போராடி மரணமடைந்த சசிபெருமாளின் சொந்த மாவட்டம் சேலம். அந்த மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், எடப்பாடி, ஓமலூர், சங்ககிரி என 10-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள் பரிந்துரை அளித்திருந்தனர். ஆனால், மேற்குறிப்பிட்ட பகுதி களில் ஒரு கடைகூட மூடப்பட வில்லை. இது, மதுவிலக்கு ஆதர வாளர்களிடையே ஏமாற்றத்தை யும் அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது.