திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளதால் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்று ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலுரை அளிக்கும்போது முதல்வர் சட்டப்பேரவையில் கூறினார். ஆனால், அவர் அப்படி பேசிய அடுத்த சில நாட்களிலேயே, சென்னையில் 2 மாணவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தளி அருகே 4 பேரை கட்டிப் போட்டு 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
சென்னை ராயப்பேட்டையில் ஒரு தாய், 3 மகள்கள் கொல்லப்பட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் சுவாதி காலை நேரத்தில் கொல்லப் பட்டுள்ளார். கேளம்பாக்கத்தில் ராஜா என்னும் இளைஞர் கொல்லப்பட்டார். அம்பத் தூரில் கிணற்றில் தள்ளி தாய் கொலை என 9 கொலைகள் ஒரே நாளில் நடந்தன. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை பொறுத்த வரை தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ் கிறது என்பதற்கு இதுதான் அடையாளமா?
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடிக்கு முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டதாக முதல்வர் கூறினார். அது நடந்து 9 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் ரூ.23 ஆயிரத்து 258 கோடிக்கு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் தற்போது பேரவையில் கூறியுள்ளார். அதாவது மாநாட்டின்போது அவர் அறிவித்ததில் 9.60% முதலீடுகள்தான் வந்துள்ளன. எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்று சொல்லாமல் பலருக்கு வேலை கிடைத்தது என்று முதல்வர் சொல்லியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சென்னையின் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு காரணமாக மக்கள் தெருவில் இறங்கி போராடி வருவதாக செய்திகள் வெளியாகி வரும் நேரத்தில், தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது என்பது ஏற்புடையதல்ல மத்திய அரசிடம் நிதி கேட்க டெல்லி சென்ற முதல்வர், நிதி அமைச்சரை சந்திக்காததோடு, மாநில நிதி அமைச்சர் மற்றும் நிதித்துறை செயலரையும் உடன் அழைத்துச் செல்லவில்லை.
தமிழகத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் 13 ஆயிரம் மெகாவாட் அனல் மின் திறனும், 3 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின் திறனும் கொண்ட அலகுகள் நிறுவப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட பல மின் திட்டங்கள் கிடப்பில் உள்ளபோது இப்படி கூறுவது சொல்லுக்கும் செயலுக்கும் இந்த அரசிடம் உள்ள தூரத்தை காட்டுகிறது. மணல் கொள்ளை, அரிசிக் கடத்தலை தடுப்பது குறித்து ஆளுநர் உரையில் எதுவும் இடம்பெறாததிலிருந்து அரசின் அக்கறையை புரிந்துகொள்ளலாம். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.