திருப்பதி அருகே கைது செய்யப் பட்ட 32 அப்பாவி தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
ஆந்திராவில் திருப்பதி உட்பட வனப் பகுதிகளில் இருந்து செம்மரங்களை வெட்டி வெளிமாநிலங்களுக்கு கடத்தப் படுகின்றன. இந்த கடத்தல் கும்ப லில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஈடுபடுவதாக ஆந்திர அரசு குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் அப்பாவி தமிழர் கள் 32 பேர் கைது செய்யப்பட்டுள் ளனர். இது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:
தமிழகத்தின் திருவண்ணா மலை, வேலூர் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த 32 பேர், ஆந்திர மாநில போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த 32 அப்பாவித் தமிழர்களும் சென்னையில் இருந்த கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்துள்ளனர். இவர் களை பின்தொடர்ந்து வந்த ஆந்திர மாநில காவல் துறையினர், ரேணிகுண்டா ரயில் நிலையத்தில் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 109, 120 பி மற்றும் ஆந்திர பிரதேச காடுகள் சட்டப்பிரிவு 20(1) (டி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைவரும் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ரயிலில் வந்த அப்பாவி பயணிகள். காடுகள் தொடர்பான குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கிடையாது. அவர்களை காடுகள் தொடர்பான சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்தது சரியல்ல.
எனவே, இப்பிரச்சினையில் தாங்கள் தலையிட்டு 32 பேரையும் உடனடியாக விடுதலை செய்யத் தேவையான நடவடிக்கைளை எடுக்க வேண்டும். அப்பாவித் தமிழர்களை விடுவிப்பதற்கு தேவையான சட்ட ரீதியான பணி களில் உதவிட, தமிழக அரசின் சார்பில் 2 வழக்கறிஞர்களை அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.