தமிழகம்

மருத்துவமனைக்கே சென்று நீதிபதி விசாரணை: சுவாதி கொலையாளி ராம்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல்

ஆர்.சிவா

உடல்நிலை சரியானதும் புழல் சிறையில் அடைக்க உத்தரவு

சுவாதி கொலை வழக்கில் பிடிபட்டு தற்கொலைக்கு முயன்ற ராம்குமார் நேற்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவ மனைக்கே சென்று அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி, அவரை 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறி யாளர் சுவாதி கடந்த 24-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அடுத்த டி.மீனாட்சி புரத்தில் தனது வீட்டில் பதுங்கி யிருந்த ராம்குமார் (24) என்ற இளைஞரை கடந்த 1-ம் தேதி நள்ளிரவு சுற்றிவளைத்து கைது செய்தனர். போலீஸார் பிடிக்க முயன்றபோது, ராம்குமார் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அவர் திருநெல்வேலி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.

திருநெல்வேலி மருத்துவமனை யில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4.20 மணிக்கு ராம்குமாரை ஏற்றிக்கொண்டு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. சென்னை நுங்கம் பாக்கம் காவல் உதவி ஆணையர் தேவராஜ், 2 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 18 போலீஸார் 4 ஜீப்களில் பாதுகாப்புக்கு வந்தனர். ஒரு அதிரடிப்படை குழுவும் தனியாக வேனில் வந்தது. ராம்குமார் இருந்த ஆம்புலன்ஸ் நேற்று அதிகாலை 4.50 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்தடைந்தது. அங்கு சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு ராம்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டாக்டர் மயில்வாகனன் தலைமையில் ஒரு பொது மருத்துவர், காது மூக்கு தொண்டை நிபுணர், மயக்கவியல் நிபுணர், நர்ஸ், உதவியாளர் உட்பட 7 பேர் கொண்ட குழுவினர் ராம்குமாரின் உடல்நிலையை ஆய்வு செய்தனர். சோதனைக்குப் பிறகு, அவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்தனர்.

சுவாதி கொலை வழக்கு விசாரணை எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்றத்தில் நடக்கிறது. எழும்பூர் நீதிமன்றம் தற்போது சென்ட்ரல் அருகே மூர் மார்க்கெட் வளாகத்தில் செயல்படுகிறது. இதில் 14-வது நீதிமன்றம் 2-வது தளத்தில் உள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருக்கும் ராம் குமாரை அங்கு கொண்டு செல்வது சிரமம் என்பதால், மருத்துவ மனைக்கே நேரில் வந்து விசாரணை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்து காவல் உதவி ஆணையர் தேவராஜ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, எழும்பூர் குற்றவியல் 14-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் (பொறுப்பு) கோபிநாத் நேற்று காலை 11.30 மணி அளவில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு வந்து, ராம்குமாரிடம் விசாரணை நடத் தினார். ‘‘உங்கள் சார்பில் வாதாட வழக்கறிஞர் இருக்கிறாரா? வழக்கறிஞர் தேவை என்றால் நீதிமன்றமே உங்களுக்கு ஏற்பாடு செய்யும்’’ என்று நீதிபதி கேட்ட தாகவும், அதற்கு ராம் குமார், ‘‘என் குடும்பத்தினர் ஊரில் இருப்பதால் இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியவில்லை’’ என்று தெரிவித்ததாகவும் கூறப்படு கிறது.

20 நிமிடம் விசாரணை

ராம்குமார் மீது பதிவு செய்யப் பட்டுள்ள வழக்கு விவரங்கள், குற்றச்சாட்டுகள், அதற்கான ஆதாரங்கள் தொடர்பாக போலீ ஸார் கொடுத்த ஆவணங்களை நீதிபதி ஆய்வு செய்தார். ராம் குமாருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவ அறிக்கையைப் பார்த்தும், மருத்துவர்களிடம் கேட்டும் தெரிந்துகொண்டார். பின்னர், 15 நாட்களுக்கு (18-ம் தேதி வரை) ராம்குமாரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். சிகிச்சை முடிந்து உடல்நிலை சரியானதும் புழல் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார். இந்த விசாரணை சுமார் 20 நிமிடங்கள் நடந்தது.

காவலில் எடுக்க முடிவு

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத் தில் சுவாதி வெட்டிக் கொல்லப்பட்ட இடத்துக்கு அழைத்துச் சென்று கொலை செய்த விதத்தை நடித்துக் காட்டச்சொல்லியும், அவர் தங்கி யிருந்த மேன்ஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT