நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ரூ.1 கோடி மதிப்பிலான காப்பீடு கொண்ட புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ஆயுர்வேத சிகிச்சைக்கும், எய்ட்ஸ் உள்ளிட்ட நோய் களுக்கான சிகிச்சைக்கும் கவரேஜ் கிடைக்கும்.
இதுகுறித்து, நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜி.நிவாசன் நேற்று சென்னையில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு நிறுவன மான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ், புதிதாக ‘நியூ இந்தியா பிரீமியர் மெடிக்ளைம்’ என்ற மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இக் காப்பீட்டுத் திட்டம் ரூ.15 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான காப்பீட்டைக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரூ.1 லட்சம்
வரை ஏர் ஆம்புலன்ஸ் (ஹெலிகாப்டர் மற்றும் விமான செலவுகள்) ரூ.1 லட்சம் வரை மகப்பேறு உதவித்தொகை, ரூ.5 லட்சம் வரை எச்.ஐ.வி., எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கவரேஜ், ரூ.20 லட்சம் வரை ஆயுர்வேத சிகிச்சைக்கான கவரேஜ் கிடைக்கும்.
எய்ட்ஸ் நோய் மற்றும் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் பல் சிகிச்சை ஆகியவற்றுக்கு காப்பீடு வழங்கும் முதல் காப்பீடு திட்டம் இதுவாகும். 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேரலாம். ஒரு பாலிசியில் ஒருவர் முதல் அதிகபட்சம் 6 பேர் வரை சேர்க்கலாம். அத்துடன், இப்பாலிசியில் இடையில் பாலிசிதாரருக்கு திருமணம் ஆனால், தனது கணவர் அல்லது மனைவியை சேர்த்துக்கொள்ளலாம். மேலும், பிறந்த குழந்தையையும் சேர்த்துக்கொள்ளலாம். இதற் காக கூடுதல் பிரீமியம் கட்டத் தேவையில்லை.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கடந்த 2016 டிசம்பர் 31-ம் தேதி வரை பிரீமியம் தொகையாக ரூ.15,543 கோடி ஈட்டியுள்ளது. இது 21.11 சதவீத வளர்ச்சியாகும். நடப்பு 2017-18-ம் ஆண்டில் பிரீமியம் தொகை ரூ.25 ஆயிரம் கோடியாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 சதவீத பாலிசிகள் தற்போது ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நடப்பாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 300 மைக்ரோ அலுவலகங்கள் திறக்கப்பட உள்ளன. அத்துடன், 70 ஆயிரம் புதிய ஏஜென்ட்கள் நியமிக்கப்பட உள்ளனர். கடந்த ஆண்டு வீசிய மழை வெள்ளத்தின் போது இழப்பீடு கோரி ஆயிரம் விண்ணப்பங்கள் வந்தன. ரூ.315 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.
இவ்வாறு ஸ்ரீநிவாசன் கூறினார்.
இச்சந்திப்பின் போது, நியூ இந்திய அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பொது மேலாளர் டி.எல்.அலமேலு, துணைப் பொது மேலாளர் ஜெ.ஜெயந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.