தமிழகம்

சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஸ்மார்ட் நகரங்களாக மாற்றப்பட உள்ள 100 நகரங்களில் முதல்கட்டமாக 20 நகரங்களின் பட்டியலை மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் வெளியிட்டது. அதில் சென்னை மாநகரமும் இடம்பெற்றது. சென்னையில் இத்திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் தலா 50 சதவீதம் நிதியுதவியுடன் ரூ.1,366 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.

அதற்காக சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற நிறுவனத்தை தொடங்க, சென்னை மாநகராட்சி நிர்வாகம், அரசிடம் அனுமதி கேட்டது. கடந்த மே 24-ம் தேதி அரசு அனுமதி வழங்க அரசாணை வெளியிட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக மாநகராட்சி ஆணையர் சந்தரமோகன் நியமிக் கப்பட்டுள்ளார். மேலும் 13 இயக்குநர்களும் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், கம்பெனி சட்டம் 2013-ன் கீழ் இயங்கக்கூடியது. அதனால் இந்த நிறுவனம் அச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துக்கு விரைவில் மத்திய, மாநில அரசுகளின் நிதி கிடைக்கும். அதைக்கொண்டு திட்டப் பணிகள் தொடங்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT