எழும்பூரில் ஒரு ஓட்டலில் நடந்த மது அருந்தும் போட்டிக்கு 'அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்' (ஏபிவிபி) அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது அருந்தும் போட்டி நடத்தப்படுவதாக இருந்தது. இந்நிலையில் அந்த ஓட்டலுக்கு ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்ற ஏபிவிபி அமைப்பினர் கலாச்சாரத்தை கெடுக்கும் இதுபோன்ற போட்டிகளை நடத்துவதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். விரைந்து வந்த எழும்பூர் போலீஸார் போட்டியை நிறுத்த உத்தரவிட்டதை தொடர்ந்து போட்டி நிறுத்தப்பட்டது. பின்னர், ஏபிவிபி அமைப்பினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது, 'மது குடிக்கும் போட்டி நடத்தவில்லை. ரூ.2,500-க்கு அளவில்லா பீர் குடிக்கும் சலுகையை மட்டுமே அறிவித்திருந்தோம்' என்றனர்.
கர்நாடகா மாநிலத்தில் ஏபிவிபி அமைப்பினரின் வன்முறை போராட்டங்கள் பரபரப்பாக பேசப்பட்டன. இரவு விருந்து நடக்கும் இடங்களுக்குள் நுழைந்து தாக்குவது, காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது, காதலர்களை விரட்டி விரட்டி தாக்கியது என இந்த அமைப்பினர் மக்களிடம் பிரபலமானார்கள்.
இதேப்போல தமிழகத்திலும் நடைபெற வாய்ப்பிருக்கிறதா? என்ற சந்தேகத்துடன் ஏபிவிபி அமைப்பின் சென்னை மாவட்ட அமைப்பாளர் முத்துராமலிங்கத்தை அணுகினோம்.
அவர் நம்மிடம் கூறுகையில், "மது குடிப்பவர்களின் காலில் விழுந்து மது குடிப்பதை விடச்சொல்வது, டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடுவது, மதுவிற்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்துவது என தமிழகத்தில் காந்திய வழியில் மட்டுமே போராட்டங்களை நடத்தி வருகிறோம்.
மதுவிற்கு எதிராக நாங்கள் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் எங்கள் அமைப்பின் உறுப்பினர் இமெயில் முகவரிக்கு 'எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் மது குடிக்கும் போட்டி' நடைபெற இருப்பதாக தகவல் வந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு சென்று மேலாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதை தடை செய்தோம்.
அலுவலக நேரமான காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பலர் மது குடிப்பதில்லை. அந்த நேரத்திலும் விற்பனையை அதிகரிக்க சென்னையில் உள்ள பல ஓட்டல்களில் பகல் நேரங்களில் 'ஹேப்பி ஹவர்ஸ்' என்ற பெயரில் ஒரு பாட்டில் வாங்கினால் மற்றொன்று இலவசம், சைட் டிஷ் இலவசம் என விளம்பரம் செய்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு மது விருந்திற்கும் சில ஓட்டல்கள் ஏற்பாடு செய்துள்ளன. இதுபோல கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் அனைத்து இடங்களையும் கண்டுபிடித்து அவற்றிற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.
புத்தாண்டு கொண்டாட்டத்திலும் மது விருந்து வைத்தால் முற்றுகையிடுவோம். மதுவிற்கு எதிராக செயல்படும் கட்சிகளுடன் இணைந்து செயல்படுவோம். மது இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்றவரை முயற்சி செய்வோம்" என்றார்.