தமிழகம்

5 ஆண்டுகளில் 5.82 லட்சம் பேருக்கு ரூ.171 கோடி உதவித் தொகை: அமைச்சர் நிலோபர் கபீல் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 5.82 லட்சம் பதிவுதாரர்களுக்கு வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகையாக ரூ.171.14 கோடி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் 82.94 லட்சம் பேர் அரசு வேலைக்காக பதிவு செய்துள்ளனர். சிறப்பு திட்டமாக, கடந்த 2011ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு, பிளஸ் 2 பயின்றவர்களுக்கு படித்த பள்ளியிலேயே தங்கள் கல்வித் தகுதியை பதிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளில் , வேலைவாய்ப்பு அலுவலகங்களால் பரிந்துரைக்கப்பட்டு, அரசுத்துறையில் 77 ஆயிரத்து 271 பேரும், தனியார் துறையில் ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 931 பேரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப் பட்டு வருகின்றன. வேலைவாய்ப்பு உதவித்திட்டத்தின் கீழ், கடந்த 5 ஆண்டுகளில் 5 லட்சத்து 82 ஆயிரம் பேருக்கு ரூ.171 கோடியே 14 லட்சம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை யாக வழங்கப்பட்டுள்ளது. அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கடந்த மார்ச் மாதம் வரை, 8 ஆயிரத்து 777 பேர் 34 நாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு மட்டும் 308 பேர் பணியமர்த்தப்பட்டுள் ளனர். இந்த நிறுவனத்தில் 20 ஆயிரத்து 773 பேர் பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில், தொழிலாளர் நலத்துறை செயலாளர் குமார் ஜெயந்த், தொழிலாளர் நலத்துறை ஆணையர் பி.அமுதா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் சி.சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT