தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன பொதுமேலாளர் முருகேஷ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது:
சென்னை உள்ளிட்ட நாட்டின் மாநகரங்களில் 31.10.2012-க்குள் கேபிள் டி.வி. ஒளி பரப்பு டிஜிட்டல் மயமாக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து டிஜிட்டல் சேவை வழங்குவதற்கான உரிமம் கோரி அரசு கேபிள் டி.வி. நிறுவனம் சார்பில் விண்ணப்பித்தோம். எனினும் இதுவரை உரிமம் வழங்கப்படவில்லை.
இதற்கிடையே டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான கால அவ காசத்தை நீட்டிக்கக் கோரி அரசு கேபிள் டி.வி. நிறுவனம் மற்றும் பிறர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இம்மாதம் 10-ம் தேதி டிராய் ஒரு பத்திரிகை செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை மாநகரில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு அனலாக் முறையிலிருந்து உடனடியாக டிஜிட்டல்மயமாக மாற வேண்டும். இல்லையெனில் கேபிள் டி.வி. இணைப்பு எந்நேரத்திலும் துண்டிக் கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. டிஜிட்டல்மய ஒளி பரப்புக்கான உரிமம் கோரி நாங்கள் அளித்த விண்ணப்பம் மீது இதுவரை முடிவு எதுவும் எடுக்காத நிலையில், டிராய் இவ்வாறு அறிவித்திருப்பது சட்ட விரோதமானது. ஆகவே, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்புக்கு டிராய் இடையூறு செய்யக் கூடாது என நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.