தமிழகம்

சர்ச்சைக்குரிய அமெரிக்க கப்பல் வழக்கு க்யூ பிரிவுக்கு மாற்றம்

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்ட அமெரிக்க கப்பல் தொடர்பான வழக்கு, தமிழ்நாடு க்யூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, கடலோரக் காவலிடம் இருந்து க்யூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, டி.ஜி.பி. ராமானுஜம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

தூத்துக்குடி கடல் பகுதியில் இந்திய கடல் எல்லைக்குள் ஆயுதங்களுடன் வந்த சீமேன் கார்டு ஓகியா என்ற கப்பல் வெள்ளிக்கிழமை சுற்றி வளைக்கப்பட்டது.

கடலோர காவல் படையினர் மட்டுமின்றி, இந்திய கடற்படையினர், ஐ.பி., கியூ பிரிவு உள்ளிட்ட மத்திய, மாநில உளவுப் பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் விசாரணை நடத்தினர்.

அந்தக் கப்பலில் 35 நவீன துப்பாக்கிகள் இருந்தன. மேலும், 25 பாதுகாவலர்கள், 10 கப்பல் மாலுமிகள் இருந்தனர். அவர்கள் மீது அளவுக்கு அதிகமாக ஆயுதங்கள் வைத்திருந்தது, தோட்டாக்களை வைத்திருந்தது, நடுக்கடலில் சட்டவிரோதமாக டீசல் பரிமாறியது, குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமாக இந்திய கடல் பகுதியில் இருந்தது ஆகிய 4 பிரிவுகளின் கீழ் தருவைகுளம் கடலோர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அந்தக் கப்பல் தொடர்பாக மர்மம் நீடிக்கும் நிலையில், அந்த வழக்கை இப்போது க்யூ பிரிவுக்கு தமிழக அரசு மாற்றியுள்ளது.

இதனிடையே, சர்ச்சைக்குரிய அந்தக் கப்பல் தொடர்பாக முதற்கட்ட அறிக்கை ஒன்றை, உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது.

அதேவேளையில், அந்தக் கப்பலுக்கு சட்டத்துக்குப் புறம்பாக 1,500 லிட்டர் டீசல் வழங்கிய இருவரை தேடும் பணியை காவல்துறை முடுக்கிவிட்டுள்ளது. டீசலுக்காகத்தான் கப்பல் இந்திய எல்லைக்குள் வந்ததா என்கிற ரீதியிலும் விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT