தமிழகம்

மோடி பிரதமரானால்தான் இந்தியா வல்லரசாகும்: விஜயகாந்த்

செய்திப்பிரிவு

நரேந்திர மோடி பிரதமரானால்தான் இந்தியா வல்லரசாகும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

ஊட்டியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணியை ஆதரித்து மேற்கொண்ட பிரச்சாரத்தில அவர் பேசியது:

"தமிழக மக்களுக்கு நரேந்திர மோடி நன்மை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம்பிக்கைதானே வாழ்க்கை.

ஊட்டியில் உள்ள படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோருகிறார்கள். இதுவரை யாருமே அந்தக் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

ஊட்டியில் ஏழை மக்கள் மிகுதியாக இருக்கிறார்கள். ஆனால், ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட இல்லை.

நான் படத்தில்தான் நடிப்பேன். நேரில் நடிக்கத் தெரியாது. இனி, என் மகன் படத்தில் மட்டும்தான் நடிப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியா வல்லரசாக நரேந்திர மோடிதான் பிரதமராக வேண்டும். குஜராத்தில் மிகுந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளதைக் கண்கூடாகப் பார்க்கிறேன்.

டாஸ்மாக் விற்பனையில் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கும் ஜெயலலிதா அரசு, ஏழைகளின் வளர்ச்சிக்கு ஏதேனும் இலக்கை நிர்ணயித்திருக்கிறதா?

ஊட்டியைப் பொருத்தவரை, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்கு தமிழக அரசு ஏதாவது செய்திருக்கிறதா?

மினி பஸ்சில் எங்கு பார்த்தாலும் இரட்டை இலை சின்னம் இருக்கிறது. அதை வெறும் ஓவியம் என்கிறார்கள். இலவசங்களை விலையில்லா பொருள்கள் என்கிறார்கள். எங்கு பார்த்தாலும் மின் வெட்டு, தண்ணீர் பிரச்சினை. ஆனால், குடிநீரை விலைக்கு விற்கிறார்கள். இதுதான் ஆட்சியா?

விஜயகாந்த் கோபப்படுகிறார் என்கிறார்கள். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும் என்பது பழமொழி.

13 மாதங்களில் வாஜ்பாய் அரசைக் கவிழ்த்த ஜெயலலிதா, இப்போது யாருடைய ஆட்சியைக் கவிழ்க்க வாக்கு கேட்டு வருகிறார்கள். நான் 20 எம்.எல்.ஏ.க்களுடன் பிரதமரைப் பார்த்தேன். எந்தப் பிரச்சினையிலும் பிரதமரைப் பார்க்காத முதல்வர் ஜெயலலிதா, சாதாரண மக்களை எப்படிப் பார்ப்பார்?

திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மக்கள் வாக்களித்தால், அவர்கள் ஊழலுக்குத் துணைபோகிறார்கள் என்றுதான் அர்த்தம்.

அம்மா உணவகம், அம்மா பார்மஸி, அம்மா குடிநீர்... இப்படி எல்லாவற்றுக்கும் அம்மா பெயர் வைக்கிறார்கள். மக்களைப் பாழ்படுத்தும் டாஸ்மாக் கடைகளுக்கு அம்மா மதுக்கடை என்று பெயர் வையுங்களேன்.

நரேந்திர மோடி என்ன குஜராத்தில் கடையைத் திறந்து வைத்திருக்கிறார்களா? நான் ஷூட்டிங்குக்காக குஜராத் சென்றபோது, அகமதாபாத்தில் நேரில் பார்த்தேன். ஒரு மதுக்கடை கூட இல்லை. அதுதான் மோடி ஆட்சி. அந்த நல்ல ஆட்சி, இந்தியா முழுவதும் வேண்டும். அதற்கு மோடி பிரதமராக வேண்டும்.

நம் கூட்டணிக்கு சண்டை சச்சரவுகள் வரக்கூடாது. எல்லாரும் ஒற்றுமையுடன் இந்தத் தேர்தலில் செயல்பட வேண்டும்" என்றார் விஜயகாந்த்.

SCROLL FOR NEXT