தமிழகம்

பாதி தொகுதிகளைக்கூட காங்கிரஸ்,பா.ஜ.க.வால் கைப்பற்ற முடியாது: இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் பேச்சு

செய்திப்பிரிவு

நாடாளுமன்றத் தேர்தலில் பாதி தொகுதிகளைக் கூட காங்கிரஸ், பா.ஜ.க.வால் கைப்பற்ற முடியாது என்று இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் கூறியுள்ளார்.

திருச்சி அறிவாளர் பேரவையின் 12-வது ஆண்டு நிறைவு விழா, சிவானந்த பாலாலயாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்து குழுமத்தின் தலைவர் என்.ராம் பேசியது:

விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்வாதாரப் பிரச்சினை போன்றவை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்காளர்களின் மனதில் மாற்றம் ஏற்படுத்தும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. ஊழல் ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தாலும், நடந்து முடிந்த 5 மாநிலத் தேர்தல்களில், விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், வாழ்வாதாரம் ஆகியவற்றை முக்கிய பிரச்சினைகளாக மக்கள் காட்டியிருக்கின்றனர்.

1977, 80, மற்றும் 84-ம் ஆண்டுகளில் நடந்த பொதுத் தேர்தல்களைப் போலல்லாமல், இந்த முறை நாடு முழுவதும் எந்த அலையும் இல்லை. பா.ஜ.க.-வில் மோடியின் தாக்கம் இருந்தாலும் தேர்தல் களத்தில் பாதிக்கு மேல் அது உதவாது. தற்போதைய அரசியல் நிலவரத்தில் சந்தேகமின்றி பா.ஜ.க. தனிப்பெரும் கட்சியாக வளர்ந்துகொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் தற்போதைய பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிவசேனா மற்றும் அகாலிதள் ஆகிய 2 கட்சிகள் மட்டும்தான் மத்தியில் பா.ஜ.க. தலைமையிலான அரசை உருவாக்க உதவும் கட்சிகளாக இருக்கின்றன. 250 மக்களவைத் தொகுதிகளைப் பெற பா.ஜ.க. பெரிய சிக்கல்களைச் சந்திக்கும் என்பது முன்வைக்கப்படுகிறது.

பா.ஜ.க.வினரைக் கவர்ந்த அளவுக்கு, தோழமைக் கட்சிகளைக் கவர வாஜ்பாயைப் போல, பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியால் முடியவில்லை. ஊழல் மோசடிகளாலும் மற்ற பெரும் பிரச்சினைகளாலும் நாடு உறைந்து போனது. இதனால் வரும் தேர்தல் காங்கிரஸுக்கு கடினமாக இருக்கும்.

நாடாளுமன்றத் தேர்தல் மைதானத்தில் காங்கிரஸ் முழு களத்திலும், பா.ஜ.க. பாதி களம் வரையும் மட்டுமே ஆடும் சூழல் நேரும். எனவேதான், இந்த அரசியல் சூழலைக் கவனிக்கும் பல அரசியல் கட்சிகள் மோடிக்கு ஆதரவு அளிக்கத் தயங்குகின்றன.

காங்கிரஸாக இருந்தாலும் பா.ஜ.க.-வாக இருந்தாலும் மக்களவையில் பாதி தொகுதிகளைக் கைப்பற்றுவதில் தோல்வியடைவார்கள். இதைத்தான் அரசியல் விமர்சகர்களும் தேர்தல் கணிப்பாளர்களும் கூறுகின்றனர். பலருடைய பார்வையில் எந்த கட்சியும் ஸ்திரத்தன்மையை உருவாக்க முடியாது, எந்த அரசியல் கட்சியும் பெரும்பான்மையைப் பெற முடியாது என்பதே கருத்தாக உள்ளது என்றார் என்.ராம்.

அடுத்து பேசிய பொருளாதார வல்லுநர் வெங்கடேஷ் ஆத்ரேயா, “1991-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் விவசாயத் துறை, உற்பத்தித் துறை இரண்டுக்குமே உதவவில்லை. அது ஒரு சிறிய அளவில் கார்ப்பரேட் பிரிவுக்கும், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், அதிகாரத்திலிருக்கும் அரசியல் தலைவர்களுக்கும்தான் உதவியது. கடந்த 20 ஆண்டுகளில் எல்லா பொருட்களின் விலையும் அதிகரித்தது. வேலைவாய்ப்பின் அளவும் சரிந்தது” என்றார்.

அறிவாளர் பேரவையின் தலைவர் ஜி.ரங்கநாதன், பொதுச்செயலாளர் டாக்டர் சி.அசோகன் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT