ஜெயலலிதா கைதானதைத் தொடர்ந்து சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆயுதபூஜையையொட்டி நடைபெற்று வரும் சிறப்பு சந்தையில் பூஜை பொருட்களின் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
ஆயுதபூஜையை முன்னிட்டு பூஜைப் பொருட்களை விற்பனை செய்வதற்காக ஆண்டுதோறும் கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோயம்பேடு பூ மார்க்கெட் பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு சந்தையில் 600-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், ஆயுத பூஜைக்கு தேவைப்படும் பூஜை பொருட்களான, வாழைக் கன்று, பூசணிக்காய், பொரி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து, பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆயுதபூஜை உற்சாகமாக கொண்டாடப்படவில்லை. பொதுமக்கள் மத்தியிலும் ஆயுத பூஜை உற்சாகம் குறைவாகவே உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஆயுத பூஜை சிறப்புச் சந்தையில் பூஜை பொருட்களின் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறப்பு சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் இதுபற்றி கூறும்போது, “இந்த சந்தைக்கு வேலூர், விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பூஜை பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன. கடந்த ஆண்டு ஆயுத பூஜையின்போது சிறப்பு சந்தையில் நிற்கக்கூட இடம் இல்லாத அளவுக்கு கூட்டம் இருந்தது. நான் கடந்த ஆண்டு 150 பொரி மூட்டைகளை கொண்டு வந்தேன்.
ஆயுத பூஜைக்கு ஒரு நாள் முன்னதாகவே அனைத்தும் விற்று தீர்ந்தன. இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு ஒரு நாளே உள்ள நிலையில் இன்னும் 10 மூட்டை பொரி கூட விற்பனையாகவில்லை. சிறப்பு சந்தையில் பொருட்களை விற்க நாளொன்றுக்கு ரூ.1000 செலுத்துகிறோம். பொருட்களை ஏற்றி வர லாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வாடகை கொடுத்திருக்கிறோம். இந்த ஆண்டு எங்களுக்கு நஷ்டம்தான் ஏற்படும்” என்றார்.