மெரினா கடற்கரை சாலையில் ஆட்டோவில் கஞ்சா கடத்திச் சென்ற கல்லூரி மாணவர்கள் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை மெரினா கடற்கரை யில் உழைப்பாளர் சிலை அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒரு மணியளவில் அண்ணா சதுக்கம் ஆய்வாளர் கர்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். ஆட்டோவில் வந்த 2 இளைஞர்கள் வைத்திருந்த பார்சலை பிரித்துப் பார்த்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
பிடிபட்ட இருவரும் கல்லூரி மாணவர்கள் என்பதும், சென்னை நகரத்தில் உள்ள பல கல்லூரி மாணவர்களுக்கு இவர்கள் கஞ்சா சப்ளை செய்வதும் தெரிந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 8 கிலோ கஞ்சாவும், அதைக் கடத்தப் பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த அரவிந்த், ராயப்பேட்டையைச் சேர்ந்த சித்தார்த் இருவரும்தான் கஞ்சா கடத்தியதாக பிடிபட்டுள்ளனர். அரவிந்த், திருவான்மியூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு நிறுவனத்தின் கிளை அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் உள்ளது. அங்கு சித்தார்த் சி.ஏ. படித்து வருகிறார்.
நண்பர்களான இருவரும் உசிலம்பட்டியில் இருந்து கஞ்சா பொட்டலங்களை பஸ்சில் வரவழைத்து சென்னையில் சப்ளை செய்துள்ளனர். ஆரம்பத்தில் மாதம் 2 கிலோ கஞ்சா விற்றுள்ளனர். பின்னர், மாணவர்களின் தொடர்பு அதிகரித்ததால் இப்போது மாதம் 8 கிலோ வரை விற்று வந்தனர்.
முதலில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வரவழைத்து விற்றுள்ளனர். அது சரியாக விற்காததால் உசிலம்பட்டி கஞ்சாவை வாங்கத் தொடங்கினர். உசிலம்பட்டி கஞ்சாவுக்கு மவுசு அதிகம்.
இவர்களிடம் கஞ்சா வாங்கிச் செல்லும் மற்றக் கல்லூரி மாணவர்கள் யார், உசிலம்பட்டியில் இவர்களுக்கு கஞ்சா விற்பது யார் என்பது குறித்த விவரங்களை சேகரிக்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.