மாவட்டத்தின் எல்லை வரை, அந்தந்த மாவட்ட போலீஸார் பாதுகாப்புடன் கர்நாடகா பதிவெண் கொண்ட வாகனங்கள் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் தமிழ்நாட்டில் நடந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக பாதுகாப்பு கருதி கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனங்களை போலீஸார் இயக்க அனுமதிக்கவில்லை.
நேற்று முன்தினம் மாலை முழு அடைப்பு போராட்டம் முடிந்ததை தொடர்ந்து கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் இயக்கப்பட்டன. கிருஷ்ணகிரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தும், போலீஸ் பாதுகாப்புடன் ஓசூர் வழியாக கர்நாடக எல்லை வரை அனுமதிக்கப்பட்டன. 20 முதல் 30 வாகனங்கள் வந்ததும், போலீஸ் பாதுகாப்புடன் அத்திப்பள்ளி வரை கொண்டு சென்றுவிடப்பட்டன.
இதே போல், கர்நாடகா மாநிலத்தில் இருந்து வரும் அம்மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் அனைத்தையும் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே போலீஸார் தடுத்து நிறுத்தி, மீண்டும் கர்நாடகாவிற்கே திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும் போது, முழுமையாக இயல்பு நிலை திரும்பும் வரை, பாதுகாப்பு காரணங்களுக்காக கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட இருசக்கர வாகனங்கள், கார், லாரி உள்ளிட்ட எந்த வாகனங்களும் தமிழகத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து வரக்கூடிய கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் ஓசூர் அருகே மாநில எல்லையிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன. அத்திப்பள்ளி, ஓசூர் வழியாக தமிழகத்திற்குள் நுழையாமல் பாகலூர், வேப்பனப்பள்ளி உள்ளிட்ட வேறு சாலைகளில் தமிழகத்திற்குள் வரக்கூடிய கர்நாடக பதிவெண் கொண்ட வாகனங்கள் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுகின்றன’’ என்றனர்.
கர்நாடகா மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் அனுமதிக்கப் படாததால், சொந்த ஊர்களுக்கு சென்ற பலர் ஏமாற்றத்துடன் மீண்டும் பெங்களூரு திரும்பிச் சென்றனர். இதே போல், பெங்களூருவில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் பதிவெண் இல்லாமல் வாகனத்தை ஓட்டி வருகின்றனர்.