விபத்துகளை தடுக்க புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு சென்று கொண்டிருந்த புறநகர் ரயில் படியில் தொங்கியபடி பயணம் செய்தவர்களில் 3 பேர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளனர். மேலும் 4 பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர்.
சென்னை புறநகர் ரயில் வண்டிகளில் பயணம் செய்பவர்கள் மின் கம்பத்தில் மோதி உயிரிழக்கும் நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. எனவே, புறநகர் ரயில் சேவைக்காக கூடுதல் பாதைகளை அமைத்தும், அதிக அளவில் ரயில்களை தொடர்வண்டிகளை இயக்கியும் நெரிசலை குறைக்கலாம்.
ரயில்களில் தானியங்கி கதவுகளை பொருத்துதல் ஆகியவற்றின் மூலம், புறநகர் ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற முடியும். மேலும் படியில் நிற்பதை தவிர்ப்பதன் மூலம் தான் இத்தகைய விபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்பதால், இதுதொடர்பாக பயணிகளிடம் எளிதில் மனதில் பதியும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தெற்கு ரயில்வேத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.